பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ—இக்பால் பார்க் என்ற பகுதியில் குண்டு வெடித்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள குல்சான் இ இக்பால் பூங்கா அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
ஈஸ்டர் பண்டிகை என்பதால் கிறிஸ்துவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் ஏராளமான பொலிசார் குவிந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த குண்டு வெடிப்பு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://world.lankasri.com
லாகூரில் கிறிஸ்தவர்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 65 பேர் பலி, 300 பேர் காயம்
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள பூங்கா ஒன்றுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 65 பேர் பலியாகினர், 300க்கும் மேற்பட்டோர் பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள குல்ஷன் இ இக்பால் பூங்காவின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் 65 பேர் பலியாகினர், 300க்கும் மேற்பட்டோர் பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
அந்த பூங்காவிற்கு பெரும்பாலும் லாகூரில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் வருவது வழக்கம். நேற்று ஈஸ்டர் என்பதால் பூங்காவில் கிறிஸ்தவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த தாக்குதலை கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தியதாகக் கூறி இதற்கு தாலிபான் அமைப்பின் அங்கமான ஜமாத்துல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதல் நடந்தபோது பூங்கா முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பூங்காவிற்கு நடைபயிற்சிக்காக சென்ற ஹஸன் இம்ரான்(30) கூறுகையில், குண்டு வெடித்ததும் பூங்காவில் உள்ள மரங்களுக்கு மேல் ஜுவாலை வந்தது. மக்களின் உடல்கள் காற்றில் பறந்து சிதறியதை பார்க்க கொடூரமாக இருந்தது என்றார்.