எமது பிள்ளைகள், கணவன், மனைவிகள். இருக்கின்றனரா? அமைச்சர் மங்கள முன்னிலையில் குடும்பத்தார் கண்ணீர்..

maகாணாமல் போனேரின் உறவுகள் தமது உறவுகளுக்கு நீதிகேட்டு,  காணமால் போனோர்களின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி இ.செல்வராணி தலைமையில் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று சாகாம வீதி மற்றும் அம்பாறை வீதி மற்றும் பொத்துவில் வீதி ஆகிய இடங்களில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து அக்கரைப்பற்று நகர் மணிக் கூட்டுக் கோபுரத்தில் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு பேரணியினை ஆரம்பித்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான உறவுகள்  கலந்துகொண்டு தமது தலையில், எமது உறவுகள் எங்கே எனும் எழுத்து பொறிக்கப்பட்ட கறுத்த பட்டி அணிந்து எமது பிள்ளைகள், கணவன், மனைவிகள். இருக்கின்றனரா? இருப்பார்களென்றால் எங்கே? கொல்லப்பட்டார்களேயானால் ஏன் கொன்றார்கள்? யார் கொலை செய்தது? ஏதற்கா? எங்கே புதைத்தீர்கள்?

காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்று, எமது கணவன்மார்கள், எமது உறவினர்கள், அவர்கள் குற்றம் புரிந்தாலும் புரியாவிடினும் அவர்களை காணாமல்போகச் செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை, குற்றம் புரிந்தவர்கள் என்றால் சட்டத்தின் பிரகாரம் தண்டனை கொடுக்க முடியும் ஆனால் காணாமற் போகச் செய்ய முடியாது, எமது அன்புக்குரியவர்களுக்கு நடந்ததை அறிய ஒரு தாயாக , மனைவியாக, பிள்ளையாக , உறவினராக முற்று முழுதான உரிமை உண்டு, மைத்திரி அரசாங்கம் ஜெனிவாவில் இது தொடர்பாக சில வாக்குறுதிகளை கொடுத்தது அதில் நடந்த உண்மைகளை வெளிப்படுத்துங்கள்,

நீதியை நிறைவேற்றுங்கள், நியாயமான இழப்பீட்டை பெற்றுக் கொடுங்கள், மீண்டும் காணாமற் போகச் செய்யும் சம்பவங்களை தடுத்து விடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கல்முனை பிரதான வீதி ஊடாக அக்கரைப்பற்று அதாவுல்லா நகர மண்டபத்தை சென்றடைந்து ஆர்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதன் பின்னர் பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ள அமைச்சர் மங்கள, அமைச்சர் மனோகணேசன், பிரதி அமைச்சர் திருமதி அனோமா கமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் ஆகியேரிடம் மகஜர்களை கையளிக்கவுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: