மியான்மரில் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்காக சிறப்பு “ஆலோசகர்’ பதவியை உருவாக்குவற்கான முயற்சிகளை அந்தக் கட்சி எம்.பி.க்கள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக, அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி போராடி வந்தார்.
அதற்காக அவர் பல ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அறவழிப் போராட்டத்துக்காக, 1991-ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அந்த நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி-யின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றது. மியான்மரின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கைத் துணைகளோ, பெற்றோரோ அதிபராக முடியாது.
ஆங் சான் சூகி-யின் மறைந்த கணவரும், மகன்களும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால்,
தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவராக இருந்தும் ஆங் சான் சூகி-யால் அதிபர் பதவியை ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஆங் சான் சூகி அதிபராவதைத் தடுக்கும் அரசியல் சாசனப் பிரிவை நீக்குவதற்காக, ஆட்சி அதிகாரத்தின் இன்னமும் கணிசமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ராணுவத்துடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, ஆங் சான் சூகி-யின் கார் ஓட்டுநரும், நெருங்கிய உதவியாளருமான ஹிடின் கியா மியான்மரின் புதிய அதிபராக புதன்கிழமை பதவியேற்றார்.
இந்த நிலையில், அரசுக்கான சிறப்பு “ஆலோசகர்’ பதவியை ஆங் சான் சூகிக்காக உருவாக்க, ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபரைப் போலவே ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் உடைய இந்தப் பதவி, ஆங் சான் சூகிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே வெளியுறவு, அதிபர் அலுவலகம், கல்வி, எரிசக்தி ஆகிய துறைகளுக்கான அமைச்சராக ஆங் சான் சூகி பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com