சாவகச்சேரியில் தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்டதன் பின்னால் பலரும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுக்க முயற்சிப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிசார் தேவையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தை ஒருசில அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே போன்றவர்களின் கூற்றுக்கள் அதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
சாவகச்சேரி தற்கொலைத்தாக்குதல் அங்கி கொழும்பு, வெள்ளவத்தை வீடொன்றுக்குக் கொண்டுவரப்பட இருந்ததாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கும் கூற்று எதுவித அடிப்படைகளும் இல்லாத, அரசியல் நோக்கம் கொண்டதாகும். இதுகுறித்து எதிர்வரும் வாரம் பொலிசார் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அதேபோன்று குறித்த தற்கொலைத் தாக்குதல் அங்கி ஜனாதிபதியை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டது என்று வடமாகாண ஆளுனர் தெரிவித்திருக்கும் கூற்றுக்கும் எதுவித அடிப்படை ஆதாரமும் கிடையாது.
இவ்வாறான பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசியல்வாதிகள் அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
-http://www.tamilwin.com