யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலவு வள்ளக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் தற்கொலை அங்கியொன்று உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் ஒருவிதமான பதற்றத்தையும் தோற்றுவித்திருந்தது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் இருப்பதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அந்த வீட்டை சோதனையிட்டபோதே தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் ரக குண்டுகளை வெடிக்க வைக்கும் பட்டரிகள் தோட்டாக்கள், ஐந்து சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம் இவற்றை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது அங்கு இருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரையும் பொலிஸார் விசாரித்திருந்தனர்.
இதனடிப்படையிலேயே குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்த பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இது தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர் முன்னாள் புலி உறுப்பினர் என்றே சந்தேகிக்கின்றோம். எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது. இந்த தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் அவருக்கு கிடைத்த விதம் மற்றும் அவர் அதனை தன்னிடம் வைத்திருந்தமைக்கான காரணம் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்டதாக இருக்கலாம் என நம்புகிறோம். எனினும் இது குறித்து இறுதிநிலைப்பாட்டுக்கு வர முடியவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை இவ்வாறு தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது நேற்றுமுன்தினம் மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமென தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இதுபோன்ற சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. கடந்த காலங்களிலும் இவ்வாறான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலுமில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். யுத்தமொன்று நடைபெற்ற நாட்டில் இவ்வாறு பொருட்கள் மீட்கப்படுவது வழமையானதாகும்.
எனவே இது தொடர்பில் மக்கள் எந்தவகையிலும் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உண்மையில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மக்களை அச்சத்தின் விளிம்புக்கு கொண்டு செல்லாமல் உண்மையை கண்டறிந்து மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். மாறாக மக்கள் அச்சமடையும் வகையில் கூற்றுக்களை வெளியிடுவதை அனைத்து தரப்பினரும் தவிர்த்துவிட வேண்டும்.
நேற்று முன்தினம் இந்த தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய பொது எதிரணி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
அதாவது சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளும் வெடிபொருட்களும் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் துளிர் விட்டுள்ளமையை வெளிப்படுத்தி விட்டது. முன்னாள் போராளிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவுள்ளமை மற்றும் பாதுகாப்பு படைகளின் முகாம்களை அகற்றியமை போன்ற விடயங்களே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு காரணமாகும்.
இதற்கு தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உண்மைகளை மறைத்து நாட்டு மக்களுக்கு போலியான விடயங்களை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் தவறான தகவல்களையே அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியிருக்கின்றார்.
அந்தவகையில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் இவ்வாறு யுத்தம் நடைபெற்ற பல பிரதேசங்களில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டு வந்தன.
அந்தவகையிலேயே குறுகிய கால இடைவெளியின் பின்னர் தற்போது மீண்டும் சாவகச்சேரி பகுதியில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீண்டகால யுத்தமொன்று நடைபெற்ற நாட்டில் இவ்வாறு வெடிபொருட்கள் ஆயுதங்கள் மீட்கப்படுவது சாதாரண விடயமாகும்.
மாறாக இந்த விடயத்தை பெரிதுபடுத்தி நாட்டு மக்கள் மத்தியில் எவரும் அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கக்கூடாது. அத்துடன் இந்த சம்பவத்தை வைத்து சுய அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் எந்தவொரு தரப்பினரும் ஈடுபடக்கூடாது.
இவ்வாறான சம்பவங்களை காரணமாகக் கொண்டு நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் அமைதியை சீர்குலைப்பதற்கு எவரும் முயற்சிக்கக்கூடாது.
குறிப்பாக தற்போது இவ்வாறு தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும்.
இந்தவிடயம் தொடர்பில் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் உண்மையைக் கண்டறிய வேண்டும்.
மீட்கப்பட்ட பொருட்களுக்கிடையில் காணப்பட்ட தற்கொலை அங்கியானது சிங்கள பத்திரிகையொன்றினால் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை இங்கு கவனம் செலுத்த வேண்டிய விடயமாகும்.
இவ்வாறு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மையை கண்டறிந்து மக்களை பாதுகாப்புத்தரப்பினர் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தாமதமின்றி இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். அதனடிப்படையில் விரைவில் உண்மை கண்டறியப்படுமென மக்கள் நம்புகின்றனர்.
இதேவேளை மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின்பகுதியிலிருந்தும் ஒருதொகுதி வெடிபொருட்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக இலுப்பைக் கடவை பொலிஸாரினால் மன்னார் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதனையடுத்து மன்னார் நீதிவான் முன்னிலையில் அடையாளம் காணப்பட்ட பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து இந்த வெடிப்பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நீதிவான் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் பார்க்கும்போது யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இவ்வாறு அடிக்கடி ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இவ்வாறு பல பிரதேசங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அதன் பின்னர் தற்போது இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற தகவல்களுக்கமைய வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றன. எனவே அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் சற்று ஆழமாக கவனம் செலுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி சுய அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
விசேடமாக இந்த சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பினர் விரிவான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை கண்டறிந்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
அதனைவிடுத்து மக்களை குழப்பி நாட்டில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
-http://www.tamilwin.com