யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் புலமபெயர் நாடுகளில் வாழும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்பிருக்கலாம் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தற்கொலை அங்கி விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தொலைபேசி வலையமைப்பு, வங்கிக் கணக்குகளை மையப்படுத்திய விஷேட விசாரணைகளிலேயே இத்தகைய சந்தேகிக்கத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஜேர்மனியில் உள்ள முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர், தற்போது கைதாகியுள்ள புலிகள் இயக்க உறுப்பினரான எட்வர்ட் ஜூலியஸ் எனும் சந்தேக நபருக்கு கொடுத்த ஒப்பந்தம் ஒன்றுக்கு அமைவாகவே முல்லைத்தீவிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளேமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன் கைதாகியுள்ள சந்தேகநபரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலமொன்றில் குறிப்பிட்டுள்ள தகவல்களும் தற்போது பொலிஸாரினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி ஒவ்வொரு நாளும் சந்தேக நபர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் சந்தித்ததாக கூறப்படும் நபர் ஒருவரைத் தேடி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர் புலம்பெயர் மற்றும் திருகோணமலை, மன்னார் பகுதிகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலருடன் தொடர்பில் இருந்துள்ளமை தொடர்பிலும் அந்த தொடர்பின் பின்னணி குறித்தும் விசாரணைகள் தொடர்வதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும் எட்வர்ட்டின் வங்கிக்கணக்கு மற்றும் தொலைபேசி வலையமைப்பு தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாலக சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிட்டவரும் என சந்தேகிக்கப்படுபவருமான ‘ மொரில்’ என்பவருக்கும் சாவகச்சேரி விவகாரத்துக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிங்கள நாளேடு ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
மொரிலும் அவரது குழுவுமே இதன் பின்னணியில் இருப்பதாகவும் கைதான சந்தேக நபருக்கு தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் போது கூட அரசின் பிரபல அமைச்சர் ஒருவர் அதற்கு பாதகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நேற்று வரை சந்தேக நபர் எவ்வித முக்கிய தகவல்களையும் வாக்கு மூலமாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கவில்லை எனவும் அவர் தொடர்ந்தும் மெளனம் காத்து வருவதாகவும் பொய்யான பல தகவல்களையே அவர் விசாரணையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
அதன்படி சந்தேக நபரின் வாக்கு மூலம் ஒன்றுக்கு அமைய பயங்கரவாத புலனாய்வாளர்கள் வில்பத்து காட்டில் 10 கிலோ மீற்றர்களுக்கும் அப்பால் ஆயுத தேடுதல் நடவடிக்கை ஒன்றை கடந்த 2ம் திகதி முன்னெடுத்துள்ளதாகவும் எனினும் அது சந்தேக நபரின் பொய்யான தகவல் என்பதை பின்னர் பொலிஸார் உறுதி செய்துகொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்கின்றன.
எந்த வன்முறையும் இனி வேண்டாம்.சீமான் அண்ணன் பார்த்துக் கொள்வார்.