இலங்கையில் முடிந்தது ஆயுதப் போர்! ஆரம்பமாகியது போதைப்பொருள் வர்த்தகப் போர்!

drug_heroinஆயுதப் போருக்கு முடிவு கட்டி விட்டோம். அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடுவோமென அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் போர், போதைப்பொருள் வர்த்தகப் போர்.

மா விற்கப் போனால் காற்றடிக்குது உப்பு விற்கப் போனால் மழை கொட்டுது என்பது போல் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இவ்வேளையில் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையே உடைத்து விடுவோம் என்று சவால் விடுமளவுக்கு நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளின் மிலேச்சத்தனங்கள் கட்டுமீறி உருவாகி வருவதை அண்மைய செய்திகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்றினூடாக பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் என்னும் போதைப்பொருளுடன் தென்கடலிலும் நீர்கொழும்பு பகுதியிலும் வைத்து 14 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டிருப்பதும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்த முற்பட்ட சுமார் 1 கோடியே 38 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பிடிபட்டமை, இலங்கை மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப்பொருள் வலையமைப்பொன்றின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏழு பேரை கட்டுநாயக்கா விமான நிலைய வளாகத்துக்கு வெளியே வைத்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட கைது செய்தமை, தாய்லாந்தில் வைத்து இன்ரபோல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை போன்ற தொடர் சம்பவங்கள் நாட்டுக்கு அச்சத்தை ஊட்டுவனவாக மட்டுமல்ல ஆபத்தை கொண்டுவரும் எச்சரிக்கைகளாகவும் காணப்படுகின்றன.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 7 வருடங்கள் கூட கடந்தோடவில்லை. அந்த யுத்த வடுக்களின் காயங்கள் ஆற்றப்படவில்லை. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்கள் மீள் எழுச்சி பெறா நிலையில் போதைவஸ்து என்னும் பூதம் நாட்டுக்குள் உள் நுழைந்திருப்பது ஆபத்துக் கொண்ட எச்சரிக்கை மணியாகவே கணிக்கப்பட வேண்டும்.

நாட்டின் இன்றைய சூழலில் இந்த நச்சு அம்பு செயற்பட்டு வருவதன் நோக்கத்தை இரு திசை நோக்கிய பார்வையில் ஆராய வேண்டியது அவசியமாகிறது.

1. வடகிழக்கு இளைஞர்களை நோக்கிய குறி 2. தேசிய ரீதியான ஒழுக்கக் கேடுகள் மூலம் நாட்டின் நற்பெயரைக் கெடுத்தல் என்ற குறிக்கோளை இந்த இரண்டு நோக்கத்தின் அடிப்படையிலேயே உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இணைந்து செயற்பட எத்தணிக்கின்றன என்ற தகவல்களை அண்மைக்கால செய்திகள் மூலமும் தகவல்கள் மூலமும் அறியக்கூடியதாகவுள்ளது.

யாழ். குடா நாடு யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்த ஒழுக்க விழுமியங்களின் உயர்ந்த தன்மையும் யுத்தம் முடிவுற்றதன் பின் ஏற்பட்டு கெடுமானங்கள் பற்றியும் நாம் நிறைய அறிந்திருக்கின்றோம். உயர்ந்த வாழ்வியல்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், பண்பாட்டுக் கோலங்கள் நிறைந்த யாழ். குடாநாட்டில் இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் போதைவஸ்து பாவனைகளை வளர்த்து விடுவதற்காகவும் கடைகெட்ட சமூகமாக மாற்றுவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது நாம் அறியாத ஒரு விடயமல்ல. அதன் ஒட்டு மொத்த விளைவாகவே இன்று யாழ். குடா நாட்டில் பட்டப்பகலில் கொள்ளையும் ஈவிரக்கமற்ற கொலைகளும் நடைபெறும் வன்மம் மிக்க ஒரு சமுதாயமாக ஆகிக்கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது.

கிடுகு வேலிக்குள்ளும் பனையோலை கலாசாரத்துடனும் வாழ்ந்து காட்டிய மக்கள் மத்தியில் இன்று எல்லாமே சீரழிந்து போனதாக தலையில் கைவைத்து கவலை கொள்ளும் முன்னையவர்களையும் காணுகின்றோம்.

ஆறுமுக நாவலர் வளர்த்த கந்தபுராணக் கலாசாரமும் சைவ நெறிஒழுக்கங்களையும் கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட சக்திகள் மாணவர் மத்தியிலும் போதைப் பாவனைகளையும் கெடுமானங்களையும் உண்டாக்கும் செய்திகளும் வந்த வண்ணமேயுள்ளன. பனைமரத்தை அண்ணார்ந்து பார்த்தாலே பாவமென்று நினைக்கும் ஒரு சமுதாயம் கேரள கஞ்சாவை கடத்தும் அளவுக்கு தறி கெட்டு நிக்கின்றது என்பது கவலை தருகின்ற விடயந்தான்.

இந்த விடயங்கள் கிழக்குப் பிராந்தியத்தை விட்டு வைக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டது போல் கிழக்கில் மதுபானக் கடைகள் அதிகமாவுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோமாயின் உடல் பிடிப்பு நிலையங்கள் என மருத்துவக் காரணங்கள் சாட்டாக ஏராளமான மசாஜ் நிலையங்கள் திருகோணமலை நகரை அண்டிய புறநகர் பகுதியில் வெளிமாவட்டத்தவர் வந்து நடத்தும் இழிநிலையும் உருவாகியுள்ளது. உள்ளதைச் சொல்லப்போனால் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இவ்விதமான சமூகச் சீர்கேடுகளான நடத்தைக் கோலங்களோ சம்பவங்களோ இடம்பெற்றதாக குறிப்பிட முடியாது.

வித்தியா கொலை, வவுனியா உக்குளாங்குளம் சிறுமி ஹரிஸ்ணவி படுகொலையென எத்தனையோ நூறு சம்பவங்கள் நடந்தேறியதன் பின்னணியில் இருக்கும் மூல காரணங்களாக போதைவஸ்து பாவனை, மது பாவனை போன்ற துர்பழக்கங்கள் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

அண்மையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கையின் படி 2015 ஆம் ஆண்டு மாத்திரம் 10732 சிறுவர் துஷ்பிரயோகம் பதிவாகியுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தலைநகர்ப் பகுதியில் மசாஜ் நிலையமென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதில் ஆத்திரப்படக் கூடிய விடயம் என்னவெனில் எல்லாவித சம்பவங்களுடனும் உள்ளூர்வாசிகளும் இலங்கையர்களும் சம்பந்தப்பட்டு காணப்படுகின்றார்கள் என்பது தான் அதிர்ச்சியூட்டும் செய்தியாகும்.

அண்மையில் வெளிவந்த செய்தியொன்றில் 12 அமைச்சர்கள் எம்.பி.க்களின் பெயர்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன என்ற தகவலை ஜனாதிபதியவர்களே எடுத்துக் காட்டியுள்ளார். இது எதைக் காட்டுகிறது, வேலியே பயிரை மேயும் விந்தை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையைப் புலப்படுத்துகின்றது.

பொது இடங்களில் புகைப்பிடித்தல் குற்றம், மது அருந்துதல் குற்றம், விற்றல் குற்றம், வாங்குதல் குற்றமென்று கூறுகின்ற சட்டத்தை ஆக்குகின்றவர்கள், பெயரிலையே அனுமதிப்பத்திரங்களும் மதுபானசாலைகளும் குடிவகை கொண்ட ஹோட்டல்களும் இருப்பது இந்த நாட்டில் ஆச்சரியமான ஒரு விடயமல்ல.

இதைவிட பேரதிர்ச்சி தருகின்ற விடயம் என்னவென்றால் பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருக்கும் கருத்தானது இலங்கை மக்களை ஆச்சிரியமடைய வைப்பது மாத்திரமல்ல பயப்பாட்டையும் உண்டாக்கும்.

இது விடயம் தொடர்பில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உக்கிரமடைந்துள்ள பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களம் விஷேட திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளதாக மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் கொள்ளபட வேண்டிய விடயம்.

கொழும்பை அண்டிய பகுதிகளில் பாதாள உலக கோஷ்டியின் அட்டகாசம் அடாவடித்தனங்கள் அதிகமாக இருக்கின்ற நிலையில் வடபுலத்தில் ஏதேதோ பெயர்களில் நடைபெறுகின்ற கொள்ளைகள், கொலைகள், கொடுமைகள் சொல்லமுடியாதவையாகவே காணப்படுகின்றன.

அண்மையில் அச்சுவேலி அதனை அண்மித்த நவக்கீரியில் தொடர் கொள்ளைச் சம்வங்கள் இடம்பெற்றமை குடாநாட்டையே கதிகலங்க வைத்துள்ளது.

100 பவுணுக்கு அதிகமான நகைகள் பல லட்சம் ரூபாக்கள் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கியும் வாள் முனையில் அச்சுறுத்தியும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேபோன்ற பல சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.

இச்சம்வங்களின் மூலகர்த்தாக்கள் யார் இவ்விதமான பாஸிச நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்பவை அறியப்பட வேண்டியவை மாத்திரமல்ல அடக்கப்பட வேண்டியவையுங் கூட.

யாழ். குடா நாட்டைப் பொறுத்தவரை யுத்தத்துக்கு முன்னைய காலப்பகுதியை விட பின்னையக் காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள் கடற்படை தளங்கள் இராணுவ முகாம்கள் ஏராளமாகவேயுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நகர்வுகளும் பரிசோதனைகளும் அதிகமாகவேயுள்ளன.

இருந்த போதிலும் இவ்விதமான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன. இதை யார் நடத்தி வைக்கிறார்கள்? என்பது கண்டுபிடிக்கபடாத மர்மமாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான கெடுபிடிகள் நாடு சாபக்கேட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறதே தவிர நல்லதொரு சகுனமாகத் தெரியவில்லை.

வடபுலத்தில் இந்தியக் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றது. கள்ளத்தோணிகளின் வருகை பெருகுகிறது என்பதைக் காரணமாக காட்டி 1960ம் ஆண்டுகளைத் தொடர்ந்து அன்றைய ஆட்சியாளரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அதனை தொடர்ந்து வந்த டட்லி சேனநாயக்கா அரசாங்கம் பெருமளவிலான முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் வடபுலத்தில் நிறுவினார்கள்.

இங்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தொட்டு சிப்பாய்கள் வரை பாஷை தெரியாதவர்கள் நியமிக்கப்பட்டதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் அறியப்பட்ட விடயமே.

தற்போது கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவானது உசன் சந்தியில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன் மேற்படி கஞ்சாவானது இந்தியாவிலிருந்து பருத்தித்துறை, மாதகல் போன்ற கடற்கரைப் பிரதேசங்கள் ஊடாக கடத்தி வந்திருக்கலாமென ஊகிக்க முடிகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகச் சொல்லப் போனால் போதைப்பொருள் கடத்தலின் கேந்திர மையமாக யாழ். குடா நாடு மாறிவருகின்றதா? என்ற ஐயத்தை மேற்படி கடத்தல் சம்பவங்கள் நினைவூட்டி நிற்கின்றன.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் தேசிய ரீதியான ஒழுக்கக்கேடுகள் மூலம் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு முயற்சியாக போதைப்பொருள் வர்த்தகத்தின் ஒரு தளமாக எமது நாட்டை பாவிக்க அந்நிய நாட்டு சக்திகளும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களும் முயற்சி செய்கின்றனவா? என்ற சந்தேகங்கள் அண்மைய சம்பவங்கள் மூலம் எழுந்து நிற்கின்றன.

இலங்கையொரு ஆழகான நாடு 30 வருட யுத்தம் காரணமாக சீரழிந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பும் தீவிர முயற்சிகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் உலக அரங்கில் இலங்கைக்கு வீண் அவப்பெயரை உண்டாக்கும் முயற்சியில் ஒரு கும்பல் செயற்பட்டு வருகின்றது என்பது இதன் மூலம் உணரப்படுகிறது.

உள்நாட்டளவிலும் வெளிநாட்டு தொடர்புகள் மூலமும் பின்னப்பட்டிருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பென்பது வெறுமனே உள்நாட்டு நாணயக் கொள்ளைக்காகவோ அல்லது அந்நிய நாணய சம்பாத்தியத்துக்காகவோ செயல்படுகிறது என்பதற்கு அப்பால் நாட்டை மீண்டுமொரு களபர நாடாக்கும் உள்நோக்க அடிப்படையில் செயற்படுகின்றன என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

110 கிலோ கிராம் ஹெரொயின் கடத்தல் விவகாரத்தில் கைதான 14 சந்தேக நபர்களில் 10 ஈரான் பிரஜைகளும் ஒரு பாகிஸ்தான் பிரைஜையும் இரு இந்தியர்களும் மற்றும் சிங்கப்பூரின் முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் என ஏகப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகின்ற விடயம் யாதெனில் மேற்படி கடத்தல் வலையமைப்புடன் இலங்கையைச் சேர்ந்த உள்ளூர் முகவர்கள் பலர் அடங்குகின்றார்கள் என்ற விடயமாகும்.

பாகிஸ்தான் இலங்கை ஹெரோயின் கடத்தல் வலையமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவை மட்டுமின்றி இலங்கை, மாலைத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான முக்கோண வலையமைப்பு என்ற விடயம் போதைப்பொருள் வியாபாரம் எந்தளவு உச்சநிலையுடனும் சிறந்த வலையமைப்பு கட்டுமானத்துடன் செயற்பட்டு வருகின்றது என்பது கண்டுகொள்ளக் கூடிய விடயமாகும்.

இதில் கவலை கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் போதைப்பொருள் பாவனையை உச்ச அளவில் கட்டுப்படுத்தி அதற்கு உயர்ந்த தண்டனைகளை வழங்குகின்ற நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளே அவ்வியாபாரத்திலும் கடத்தலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் பிடிபட்டும் உள்ளனர் என்ற விபரமாகும்.

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் உரியமுறையில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற போதும் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளூர் முகவர்களின் ஆதரவுடனும் பாவனையாளர்களின் நிறைவான கேள்வியினாலும் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படும் நிகழ்ச்சிகள் நாளாந்தம் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

இதன் இன்னொரு பக்க முயற்சி தான் கேரள கஞ்சா கொடிகாமம் உசன் சந்தியில் வைத்து கைப்பற்றப்பட்ட விவகாரம். எல்லாவற்றையும் அவதானிக்கின்ற போதும் ஒரு உண்மை புலப்படுகிறது.

அரசியல் ரீதியில் ஸ்திரத்தை நாடி ஓடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவை மீண்டும் அமைதி இழக்கச் செய்து சமூக கெடுமானங்களை உருவாக்கி நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் உடைத்து விடும் நாசகார முயற்சியாகவே இப்போதைப்பொருள் வர்த்தகம் பயன்படுத்துவதற்கு காரணமாகலாம்.

இல்லையெனில் சர்வதேச அளவில் இலங்கையை ஒரு போதைப்பொருள் தளமாக மாற்ற முயற்சிக்கும் இச்சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

 -http://www.tamilwin.com
TAGS: