பாரீஸ் மற்றும் பிரஸ்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முகமது அப்ரினி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பெல்ஜியம் அரசு வழக்குரைஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பாரீஸிலும், பிரஸ்ஸெல்ஸிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முகமது அப்ரினி, பிரஸ்ஸெல்ஸின் புறநகர்ப் பகுதியான ஆண்டர்லெக்டில் கைது செய்யப்பட்டார். அவருடன் ஒசாமா கே., ஹெர்வே பி.எம். என்ற இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பிரஸ்ஸெல்ஸ் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகளுடன் இருந்த மூன்றாவது நபர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகமது அப்ரினிதானா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், அப்ரினியுடன் கைது செய்யப்பட்டுள்ள ஒசாமா கே., பிரஸ்ஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலைய தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதியுடன் காணப்பட்ட நபரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் பங்கேற்று, பின்பு பெல்ஜியம் நாட்டுக்குத் தப்பிச் சென்ற சலா அப்தெஸ்லாமை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போலீஸார் கடந்த மார்ச் மாதம் 18-ஆம் தேதி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிரஸ்ஸெல்ஸ் நகர விமான நிலையத்தில் இரு பயங்கரவாதிகளும், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பயங்கரவாதியும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
-http://www.dinamani.com


























