வரதருக்கு நடந்ததே சீ.வி.க்கும் நடக்கும்!

vikneshwaran_002வடமாகாணசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்கின்றது என்பதை மறந்து முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்போன்று செயற்படவேண்டாமென சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுகின்றோம். என்று பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரா. சம்பந்தன் தலைவராக இருக்கின்ற நிலையில் அந்தக் கட்சியின் சார்பாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எவ்வாறு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும். இது ஒரு குழப்பகரமான நிலையைக் காட்டுகிறது.

வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து இவ்வாறு செயற்படுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே அவருக்கும் நடக்கும் என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதில் பொது எதிரணியும் பங்களிப்பை வழங்கவுள்ளமை குறித்தும் அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தமை தொடர்பிலும் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்:-

அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அதேவேளை, தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அரசாங்கம் தெளிவாக இருப்பதாக தெரியவில்லை.தேசிய பிரச்சினைக்கான தீர்வானது அனைத்து தரப்பினராலும் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவேண்டிய விடயமாகும்.

அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை வெளியிடாமல் இருக்கின்ற அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி இடம்பெறுகின்ற வட மாகாண சபையில் அதன் முதலமைச்சர் ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றார்.

குறிப்பாக அண்மையில் அவர் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த வரைபு ஒன்றை வெளியிட்டிருந்தார். வட மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராக சம்பந்தன் இருக்கின்றபோது வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் எவ்வாறு தீர்வுத்திட்டங்களை முன்வைக்க முடியும்?

இது ஒரு குழப்பகரமான நிலையைக் காட்டுகிறது. வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து இவ்வாறு செயற்படுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே அவருக்கும் நடக்கும் என்பதனை நான் கூறுகின்றோம்.

வரதராஜபபெருமாளின் அறிவிப்புக்கள் விடயத்தில் அன்று ஜனாதிபதியாக இருந்தவர் வடக்கு கிழக்கு மாகாண சபையை என்ன செய்தார் என்பதனை அனைவரும் நினைத்துப்பார்க்கவேண்டும்.

கடந்தகாலத்தில் இனவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர 30 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே இதற்கு பின்னரும் இவ்வாறு செயற்படுவதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.

இதேவேளை அரசாங்கம் எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போகின்றது என்று புரியவில்லை. அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசப்படுகின்றது. ஒற்றையாட்சியில் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: