கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்: கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்

isis_boystatement_001பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு நடவடிக்கையால் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 20 மாதங்களில் கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களால் இதுவரை 25,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் ஐ.எஸ். குழுவினரின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அந்த குழுவினரை வழி நடத்தி வந்த முக்கிய தலைவர்கள் பலரும் தற்போது உயிருடன் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் ஐ.எஸ்.அமைப்பின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, அவர்களின் எண்ணெய் விற்பனையை தடை செய்ததே என தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி ஒருவர், இதனால் 50 சதவிகிதம் வரை ஊதிய குறைப்பும் தீவிரவாதிகளுக்கு நேர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் விற்பனையால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தினசரி பல மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஐ.எஸ்.குழுவினரின் தலைநகராக விளங்கும் சிரியாவின் ரக்கா பகுதியை மிக விரைவில் கூட்டுப்படைகள் தாக்குதல் தொடுக்க இருப்பதாகவும், எஞ்சிய ஜிகாதிகள் இத்தாக்குதலில் கூண்டோடு அழிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.குழுவினரின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் நடத்தப்பட்டதொடர் தாக்குதல்களால் ஜிகாதிகள் நிலைகுலைந்து போயுள்ளதை அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கடந்த 3 வாரங்களில் மட்டும் 600 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், முதிர்ந்த பல தலைவர்களும் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரக்கா மீது தொடுக்கவிருக்கும் தாக்குதல் குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது என கூறியுள்ள அவர், இது அவர்கள் சுதாரித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்றார்.

-http://news.lankasri.com