மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் சக்திகளாக சம்பந்தனும் விக்னேஸ்வரனும் செயற்படுவதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் கிருலப்பனை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை கூறினார்.
நாட்டின் எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மற்றும் வடமாகாணங்களுக்கு மாத்திரமே எதிர் கட்சியாக செயற்படுகின்றது என்றும், குறித்த இரு மாகாணங்களையும் ஒன்றிணைத்து தனி அரசாங்கம் அமைக்க செயற்பட்டு வருவதாகவும் மாகல்கந்தே சுதந்த தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழர்களுக்கு தனி நாடு கோரி இலங்கையை இலக்காக கொண்டு பல முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றது. இன வாதத்தினை தூண்டும் வகையிலும் நாட்டை பிளவு படுத்தும் வகையிலும் செயற்படுவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும் என்று மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சி காலத்தில் யுத்தத்தை முடிவு கட்டியதைப் போன்று, இனவாத அரசியல் வாதிகளுக்கும் முடிவு கட்டி இருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என மாகல்கந்தே சுதந்த தேரர் கூறினார்.
இதேவேளை நாட்டில் மீண்டும் இரத்தக்கறை ஏற்படாது தடுக்க எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com