வங்கதேசத்தில் இதழாசிரியர் படுகொலை: கல்லூரி மாணவர் கைது

வங்கதேசத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த இதழாசிரியரும் அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர்.

தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை நிகழ்ந்த படுகொலைகளுக்கு அல்-காய்தா பொறுப்பேற்றது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி “ரூப்பான்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த ஜுல்ஹாஷ் மன்னான் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
அவருடன் இருந்த அவரது நண்பர் தனய் ஃபாஹிமும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஜுல்ஹாஷ் மன்னான் அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் ஊழியராவார். வங்கதேசத்தின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த தீபு மோனியின் நெருங்கிய உறவினர்.

கூரியர் நிறுவனத்திலிருந்து மன்னானுக்கு கடிதம் வந்திருப்பதாகக் கூறிக் கொண்டு அவர் வசித்து வந்த குடியிருப்புக் கட்டடத்துக்கு மூன்று நபர்கள் வந்தனர்.
இரண்டாவது மாடியில் உள்ள அவருடைய வீட்டுக்குள் நுழைந்த அந்த மூன்று பேரும் மன்னானையும் அவருடைய நண்பரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் அவ்விருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்ற அந்தக் குடியிருப்புக் காவலருக்கு கண்ணிலும் கையிலும் கத்திக் குத்து விழுந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது, அந்தப் பகுதியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களைத் துரத்தினார்.
அவர்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸ்காரரைத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களின் பேரணியை, வங்கதேசப் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி மன்னான் நடத்தி வந்தார்.
இந்த ஆண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணி தடை செய்யப்பட்டது.

வங்கதேசத்தில் மதச்சார்பின்மை கருத்துகளைப் பரப்பி வந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் படுகொலை செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மேலும் இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் மதச்சார்பின்மை, இடதுசாரி சிந்தனை, கடவுள் மறுப்பு, ஓரினச் சேர்க்கை கருத்துகளை வெளியிட்டு வருவோருக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். மதச்சார்பின்மை கருத்துகளைப் பரப்பும் வலைப்பூ பதிவுகளை வெளியிட்ட நால்வர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.

சில படுகொலைகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

கல்லூரி மாணவர் கைது: ஜுல்ஹாஷ் மன்னானும் அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை துணை ஆணையர் ஷிப்லி நோமன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

படுகொலைகளை நிகழ்த்திவிட்டுத் தப்பியவர்களை அப்பகுதியில் இருந்த போலீஸ்காரர் துரத்தினார். அவர்கள் அந்தக் காவலரைத் தாக்கினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை காவலர் பறித்தார்.

அதில் ஒரு செல்லிடப்பேசி உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தன. அவற்றின் அடிப்படையில் கல்லூரி மாணவர் ஒருவர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்றார் அவர்.
அல்-காய்தா பொறுப்பேற்பு

இதழாசிரியரும் அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டதற்கு அல்-காய்தா பொறுப்பேற்றது.

டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்-காய்தா பிரிவு தெரிவித்திருப்பதாவது:

அவர்கள் இருவரும் வங்கதேசத்தில் ஓரினச் சேர்க்கையை ஊக்குவித்தும் பின்பற்றியும் வந்தனர்.

அமெரிக்கர்கள் மற்றும் அவர்களுடைய இந்திய சகாக்கள் துணையுடன், இரவும் பகலுமாக அவர்கள் இந்த நாட்டில் ஓரினச் சேர்க்கையைப் பரப்பி வந்தனர் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

-http://www.dinamani.com