மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் மேல் சபையொன்றையும் இணைத்து 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பொருத்தமானதாக அமையும்.இதுவே ஒற்றையாட்சியின் கீழ் சாத்தியமான தீர்வாக அமையும் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாதுகாப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஆனால் அதனைவிடுத்து சமஷ்டி முறையில் தீர்வுகாண முயற்சித்தால் அது நாட்டை பிரிவினைக்கு கொண்டு செல்லும் என்பதுடன் ஒற்றையாட்சியின் கீழ் ஒருபோதும் சமஷ்டி முறைமைக்கு செல்லவும் முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டைப் பிரிக்கமாட்டோம். பிரிவினைக்கு துணை போகமாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் செய்துவிட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் இவ்வாறு சமஷ்டி குறித்து பேசுகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நியாயமான தீர்வுத் திட்டத்தை கோரி நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று கடும்போக்காளர்களாக மாறி சமஷ்டி முறைமையின் அடிப்படையில் தீர்வைக் கோருவது ஆச்சரியமளிக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நாங்கள் புதிய அரசியல் சிந்தனை கொண்ட தலைவர்களாக பார்த்தோம். ஆனால் அவர்கள் தற்போது அவ்வாறு செயற்படவில்லை.
நாங்கள் எப்போதுமே 13வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தயாராக இருந்தோம்.அதாவது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் இந்த நாட்டில் சமஷ்டி முறைமையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
ஆனால் மேல்சபையை உள்ளடக்கிய 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்ற தீர்வுத்திட்டத்திற்கு ஒற்றையாட்சியின் கீழ் செல்ல முடியும்.அதனால்தான் நாங்கள் 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாக உறுதியளித்ததுடன் அது தொடர்பில் சர்வதேசத்திற்கும் விளக்கினோம்.
அதுமட்டுமன்றி 13வது திருத்த சட்டம் என்று வரும் போது அதில் காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் இடம்பெறுகின்றன.
எம்மைப் பொறுத்தவரையில் சில வரையறைகளுடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
குறிப்பாக ஒருசில மட்டுப்படுத்தல்களுடன் காணி அதிகாரங்களையும் சிறுசிறு அதிகாரங்களுடன் பொலிஸ் அதிகாரத்தையும் வழங்க முடியும் என நாம் கருதுகிறோம்.
அதனடிப்படையில் தீர்வுத்திட்டத்தை நோக்கி பயணிக்க நாம் தயாராக இருந்தோம். ஆனால் சமஷ்டி முறைமையின் கீழ் தீர்வு காண முயற்சித்தால் அது நாட்டைப் பிரிப்பதாகவே அமையும்.
எனவே மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் மேல் சபையொன்றையும் இணைத்து 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பொருத்தமானதாக அமையும்.இதுவே ஒற்றையாட்சியின் கீழ் சாத்தியமான தீர்வாக அமையும்.
ஆனால் தற்போதைய நிலைமையில் அரசாங்கம் எந்தவொரு விடயத்தையும் தெளிவாக கூறாததன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சமஷ்டிமுறைமையில் தீர்வைக் கோரி நிற்கின்றனர்.
அதாவது தற்போதைய அரசாங்கத்திடமிருந்து எப்படியாவது சமஷ்டி முறைமையினால் தீர்வைப் பெற்றுவிட முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. அதன் விளைவா கவே அவர்கள் அந்தக் கோரிக்கையில் உறுதியாக நிற்கின்றனர் என்றார்.
-http://www.tamilwin.com