புலம்பெயர் ஈழத்தமிழ் உறவுகளுக்கு களத்தில் இருந்து ஒரு கடிதம்…!

naam tamilarஉலகெங்கும் பரவி வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு வணக்கம். அன்னை பூமியை விடுத்து அயலக தேசங்களில் அகதியாகவும், குடியுரிமை பெற்று வாழ்ந்த போதும் தனித்தமிழ் ஈழம் என்ற ஏக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் உங்களின் உள்ளத்தோடு இந்தக் கடிதத்தின் மூலமாக இணைவதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

கால ஓட்டம் எல்லா உண்மைகளையும் நமக்குத் தெரியப்படுத்தி விடுகின்றது. இந்த 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலும் கூட ஒரு சிலரின் இல்லை இல்லை பலரின் முகங்களை நமக்குத் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றுள்ளது.

2009 இல் நடந்த இறுதி யுத்தத்தில் நமது மண்ணும் 1.75 லட்சம் நமது உறவுகளின் உயிர் பறிபோனது வெறும் சிங்களவனின் வீரத்தாலோ, உலக நாடுகளின் ஆயுதத்தாலோ இல்லை. மாறாக இந்த இந்திய மண்ணில் நடந்த அரசியலால் மட்டுமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தியா விரும்பிய போரினைதான் நாங்கள் நடத்தினோம் என்று கொக்கரித்தான் சிங்களன். அன்றைய சூழலில் இந்தியாவை ஆண்டது காங்கிரஸ் அரசு. அந்த காங்கிரஸ் அரசு அறுதிப்பெரும்பாண்மை இல்லாமல், தமிழகத்தின் 40 எம்.பிகளின் ஆதரவோடுதான் மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ்.

அந்த அதிகாரம்தான் எமது மக்களைக் கொன்றது. எனவே இனப்படுகொலைக்கு இலங்கை சிங்கள வெறிக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதற்கு இணையான பங்கு இந்த காங்கிரஸ்-திமுகவிற்கு அன்று இருந்தது.இன்றைய சூழலில் தனித்தமிழ் ஈழ விடுதலை என்பது சர்வதேச அரங்கிற்கு இழுத்துவரப்பட்டு உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் தனித்தமிழ் ஈழம் என்ற ஒரு நாடு பிறக்க வேண்டுமெனில் இந்தியாவின் அசைவின்றி அது சாத்தியம் இல்லை. இந்தியாவின் அசைவினை தீர்மானிக்கின்ற சக்தியாகத் தமிழக அரசியலின் நிலமை மாறாதவரை அதற்கான வாய்ப்பே இல்லை என நீங்களும் அறிவீர்கள்.

எனவே தனித்தமிழ் ஈழம் என்பது இன்றைய சூழலில் தமிழக அரசியலோடு நீக்கமற நிறைந்துள்ளது என என்னைப்போலவே நீங்களும் அறிவீர்கள். இவளவு முக்கியத்துவம் வாய்ந்த ஈழம் என்ற பிரச்சினை இன்றைய தேர்தல் களத்தை அலங்கரிக்கின்றதா?

உண்மையில் யார் தனித்தமிழ் ஈழ அரசியலை நோக்கி நகரும் சாத்தியங்களை வைத்து அரசியல் கூட்டணி, தேர்தல் வாக்குறுதி கொண்டு களத்தில் இருக்கின்றார்கள் என்ற கேள்வியை உங்கள் ஆழ்மனத்தில் கேட்டுப்பாருங்கள் ?.

வழக்கமாகவே ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அறிக்கைகள் தனித்தமிழ் ஈழம் என்பதற்கு எதிராகவே அமையும் என என்னைப்போலவே நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

ஆனால் இந்த மண்ணில் ஈழத்திற்கும், பிரபாகரனுக்கும் ராயல்டி கோரியவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய நெருக்கத்தில் இருந்ததாகச் சொல்லிக்கொண்டு புத்தகம் எழுதிப் பிழைப்பு நடத்துபவர்கள், அப்பழுக்கற்ற 5% சதவீத ஈழ ஆதரவாளர்கள் என இன்று களத்தில் அவர்கள் எடுத்து இருக்கும் நிலைப்பாடு என்ன ? என்பதை நீங்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது.

புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உங்களை மாவீரர் தினங்களில் மட்டுமே சந்தித்து டாலர் மற்றும் யூரோக்களின் வாசனையை நுகர்ந்துவிட்டு காலத்தை கடத்தும் தமிழகத்தில் உள்ள உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஈழ உணர்வு அரசியல்வாதிகளின் இன்றைய களம் என்ன என்பதைக் கொஞ்சம் மீளாய்வு செய்யவேண்டியது அவசியம்.

கலைஞர் செய்த இனப்படுகொலைக்கு டெசோ என்ற அமைப்பின் மூலம் பாவமன்னிப்பை கோரும் அய்யா கருச்சட்டை தமிழர், முருக்கு மீசைக்கு சொந்தக்காரர் சுப.வீக்கும், திராவிட தலைவர் வீரமணியிடமும் நீங்கள் நம்பிக்கை கொண்டவராயின் அவர்களிடம் இதைக் கேளுங்கள்.

“2009 இல் எமது இனத்தைக் கொன்ற காங்கிரசோடு மறுபடியும் 2016 தேர்தல் கூட்டணி வைத்து, சரியாக இன்றைய தினத்தில் சோனியாவும் – கருணாநிதியும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய போகின்றார்கள்.

2011 தேர்தல் முடிந்த பிறகு இதே கலைஞர் “ காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது” என்றார். இப்போது அதே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்துவிட்டதா ?” என்று கேளுங்கள்.

இனி கருணாநிதிக்காக ஈழவிடயத்தில் வக்காளத்து வாங்க வருகின்ற சுப.வீ மற்றும் கீ.வீரமணி இவர்கள் உங்களின் நம்பிக்கைக்கு உரியவர்களா? என்பதைச் சிந்தியுங்கள் உறவுகளே.

அடுத்ததாகப் பிரபாகரனுக்கும் தனித்தமிழ் ஈழத்திற்கும் பெரிதாக ராயல்டி கோருபவர் ஐயா வைகோ. தமிழக அரசியலைப் பொறுத்தவரை இவர் பிழைப்புவாதி அரசியல்வாதி. ஆனால் இவருக்கு இதுநாள் வரை புலம்பெயர் தமிழர்களாகிய நீங்கள் வைத்து இருந்தது “ஈழ உணர்வாளர்” என்ற நம்பிக்கை.

கடைசி பொழுதில் அண்ணன் சூசை அவர்கள் தொலைப்பேசியில் பேசியபோது அண்ணன் சீமான் அவர்களின் பெயரோடு சொன்ன பெயருக்கு சொந்தக்காரர். இன்றைய சூழலில் இவரின் நிலையென்ன ?

இவர் கூட்டணியில் இருக்கும் அண்ணன் திருமாவிற்கும் இதே நிலைதான். இவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகியிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் “ஈழம்” என்ற சொல் இருக்கின்றதா ?.

திருமாவை பொருத்தவரை அன்றே தனது மாநாட்டின் மேடை பதாகையில் இருந்தே இந்தச் சொல்லை நீக்கியவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்தக் கூட்டணியில் இருக்கும் வைகோ எப்படி ஈழ மறுப்பைச் சம்மதித்தார் என்பதை இந்த நேரத்தில் சிந்தித்து பாருங்கள் ?.

இவர்களைப் பொருத்தவரை இனவிடுதலை அரசியல் என்பது மாவீரர் நாள் நேரத்தில் வந்துபோகும் ஒரு சீசன் உணர்வு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் டாலர்களுக்கும், யூரோக்களுக்கும் காட்டும் ஒரு நடிப்பாகவே நான் பார்க்கின்றேன்.

உங்கள் பார்வையில் இவர்கள் எப்படி என்பதே இப்போதைய எனது வினா. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய அரசியலை ஒழிக்க அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்த வைகோ அவர்கள் 2009 இல் ஈழத்தில் நமது உறவுகள் குழந்தைகள் கொன்றொழிக்கப்பட்ட போது இது போன்ற ஒரு அழைப்பை விடுக்காதது ஏன் ?

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஐயா வைகோவிடம் “சீமானைப் பற்றி” என்ற கேள்விக்கு “ நான் எதையும் பேச விரும்பவில்லை” என எதற்காகச் சொன்னார்? என்பதையும் நீங்கள் அவரிடம் கேட்டுப்பாருங்கள்.

உறுதியாக நம்புகிறேன், இந்த கடித்ததை படிக்கும் உங்களில் ஒருவர் ஐயா வைகோவோடு பேசுகின்ற உயரத்தில் இருந்தால் இங்கே நான் உங்களிடம் முன்வைத்த கேள்விகளை அவரிடம் மறக்காமல் கேட்டு பாருங்கள்.

அடுத்ததாக ஐயா பழ. நெடுமாறன் அவர்கள். இவரின் இன்றைய நிலைப்பாடு என்ன ? ஜெயலலிதா அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் தனித்தமிழ் ஈழம் பற்றி பேசியதற்கு மட்டுமே அம்மையார் ஜெயலலிதா அவர்களைப் பாராட்டி இந்தத் தேர்தல் நேரத்தில் கடிதம் எழுதி இருந்ததையும், அது இணையங்களில் வந்து இருந்ததையும் நீங்களே அறிவீர்கள்.

நான் கேட்கிறேன், இன்னுமா இவர் ஜெயலலிதாவை நம்புகிறார்?. அப்படி நம்பினால் இவரின் அரசியல் அறிவு எத்தகையது? அப்படி இல்லையெனில் தன் பின்னே நிற்கும் உணர்வாளர்களை ஜெயலலிதாவை நோக்கி மடைமாற்றிவிட எழுதப்பட்ட கடிதமா இது ?

கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுக்காக வேலை செய்தார். காரணம் கேட்டால் ஜெயலலிதாவின் வக்குறுதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். சரி இப்போதைய அறிவிப்பில் மட்டும் எப்படி ஐயா பழ நெடுமாறனுக்கு நம்பிக்கை வந்தது ?.

மேலும் இவர் நேற்றைக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பரப்புரை செய்துவிட்டு செய்தியாளர் சந்திப்பில் சொல்கின்றார் “இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெற்றுவிட்டு, சுப உதயகுமாரை ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் அணு உலையை மூடமுடியும்” என்கிறார்.

சரி ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டும் எப்படி அணு உலையை மூட முடியும் ?. இதே சுப. உதயகுமார் அவர்கள் இந்து ராமுடன் கைகோர்த்து அலைந்த காலத்தில் “விடுதலைப் புலிகள் அமைப்பு ஈவு இரக்கமற்ற தீவிரவாத அமைப்பு” எனக் கட்டுரை எழுதியவர். இது ஐயா பழ. நெடுமாறனுக்குத் தெரியாதா ?

சரி விடுங்கள். நாம்தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து போன சிலரை வைத்து தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் “தமிழர் தேசிய முன்னணி” என்ற ஒரு கட்சியால் காலம் கடந்து உருவாக்கினார் ஐயா நெடுமாறன் அவர்கள். அப்போது கட்சியில் இணையச் சுப.உதயகுமார் அவர்களும் வந்து இருந்தார்.

ஆனால் விவாதத்திற்கு பின்னர் அவர் தமிழர் தேசிய முன்னணியில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அது ஏன் என்று இதுவரை ஐயா நெடுமாறனும், சுப.உதயகுமாரும் வெளியிடவில்லை ஏன் ?

ஐயா பழ. நெடுமாறனைப் பொருத்தவரை இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியல் என்பது கருத்தரங்கு உள்ளேயும், கவியரங்கு உள்ளேயும் சிக்கி தவிக்க வேண்டுமே தவிர வெகுசன அரசியலாக இந்த மண்ணில் உலவவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் ஐயா நெடுமாறன் அவர்கள்.

இந்தச் சூழலில் இந்தக் கடிதத்தை படிக்கும் உங்களில் ஒருவர் ஐயா நெடுமாறனிடம் கேளுங்கள். “தனித்தமிழ் ஈழம் என்பதை மறுத்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு போன தேர்தலில் ஆதரித்து நின்றீர்கள், விடுதலைப்புலிகளை ஈவு இரக்கமற்ற தீவிரவாதிகள் என்று விமர்சனம் வைத்த சுப. உதயகுமாருக்கு இந்தத் தேர்தலில் முட்டுக் கொடுத்து நிற்கின்றீர்கள்.

இவர்களுக்கு எந்த வகையில் இன உணர்வில் சீமானும் – நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும் குறைந்தவர்கள் ?

ஒருவேளை சீமான் தனது தேர்தல் செயல்வரைவு திட்டத்தில் “தனித்தமிழ் ஈழமே எங்களின் முடிவான இலக்கு” என்று வெளியிட்டு இருப்பதாலா” எனக் கேளுங்கள்.ஐயா மணியரசன் அவர்கள், வழக்கம் போலவே தனது கொள்கைவழி நின்று தேர்தல் புறக்கணிப்பு செய்து இருக்கின்றார்.

பழுத்த அம்பேத்கரின் சிந்தனைவாதி. “அனைத்துத் துன்ப-துயரங்களுக்கும் ஒரே தீர்வு ஆட்சி அதிகாரம் மட்டுமே” என்று சொல்ல அம்பேத்கரின் சொல்லுக்கு இன்றுவரை செயலாக இருப்பவர். இந்தமண்ணில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேச பொது உடைமை கட்சி என வைத்து களம் கண்டு இப்போது, என்ன காரணத்தினாலோ தமிழ்த் தேசிய பேரியக்கம் பெயர் மாற்றம் செய்து களம் காண்கிறார்.

அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் திருவோடு என நம்மை ஏமாற்றின திராவிட கட்சிகள். இவர் தனித் தமிழ்நாடு மலரும் வரை தேர்தலில் நிற்பதும் இல்லை எவரையும் ஆதரிப்பதும் இல்லை என்று கொள்கை முழங்குவார்.

தனித்தமிழ் நாடு என்ன உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மல்லிகைப்பூவா ? அதுவாக மலருவதற்கு ?. தனித் தமிழ்நாடு மலர, அல்லது அமைக்கக் கடந்த 30 ஆண்டுகளில் நீங்கள் செய்த காரியம் என்ன ? கங்காணி அரசு என விமர்சிக்கும் நீங்கள் அந்தக் கங்காணி அரசிடம் கோரிக்கை வைத்து நடத்தும் அடையாள போராட்டங்களில் அடைந்து விடுவீர்களா ?

தனிநாடு என இவரிடம் முடிந்தால் கேட்டுப்பாருங்கள். சாகும்வரை தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தம் கருத்தரங்கு மற்றும் கவியரங்குகளில் கட்டுண்டே கிடக்க வேண்டுமா எனக் கேட்டு பாருங்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதில் என்ன தயக்கம் என்பதை முடிந்தால் கேட்டுவையுங்கள் ?

அடுத்ததாக ஐயா கொளத்தூர் மணி மற்றும் கோவைரா இவர்கள். நாங்கள் எப்படி சீமானை ஆதரிக்க மூடியும் ? என்று கேள்வியை எழுப்பி, ”சீமான் திராவிடத்தை வீழ்த்துவேன் என்று களத்தில் நிற்கின்றார், நாங்கள் திராவிடத்தை காக்கும் முகமாக ஐயா கருணாநிதியை பார்க்கிறோம்.

எனவே இந்தத் தேர்தலில் கருணாநிதியை ஆதரித்து நிற்கின்றோம்” என்று செய்தி வெளியிட்டு உள்ளார். எனவே இந்த 5% ஈழ உணர்வாளர் 1.75 மக்களின் இறப்பைக்கூட சகித்துக்கொள்வார்.

ஆனால் திராவிடம் இறக்கப் போகிறது என்றால் நம்மைக் கொன்ற சோனியா-கருணாநிதியை ஆதரிப்பார் என்றால் இவரின் ஈழவிடுதலை களம் எத்தகையது என கேட்டுப்பாருங்கள்.

மாவீரர் நாள் ஒன்றில் உங்களிடம் இருந்து விமான பயணச்சீட்டு, வெளிநாட்டுப் பயணம், யூரோ-டாலர் மதிப்பில் பணம் இவைகளைத்தாண்டி இவர்களின் ஈழ உணர்வு இவர்களுக்கு இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

நீங்கள் ?இன்னும் உங்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இங்கே காட்டிக்கொண்டு, புள்ளிவிவரங்களோடு ஈழ அரசியலைப் பேசி தொண்டு நிறுவனம் நடத்தும் திருமுருகன் காந்தி தொடங்கி, ஈழ அவலங்களைப் படமெடுக்கும் ஐயா புகழேந்தி தங்கராசு வரை அவர்களின் இன்றைய தேர்தல் நிலைப்பாடு என்ன என்று கேட்டுப்பாருங்கள் ?

உங்களுக்கு நான் மேலே கூறியது போலவே, ஈழவிடுதலை இன்று சர்வதேச தளத்தில் அதிகார வணிகப்பொருளாக மாற்றி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் சந்தையை இழக்க விருப்பாத அமெரிக்காவோ, அல்லது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றோ ஐநா பொதுமன்றத்தில் வலுவாகத் தனது குரலை ஒலிக்கச்செய்து ஒருபோதும் ஈழவிடுதலையை பெற்றுத்தராது.

அப்படிச் செய்தால் இந்தியாவில் தனது சந்தைப் பாதிக்கப்படும் என்று அந்த நாடுகளுக்குத் தெரியும். இந்தியாவின் சம்மதம் இன்றி இன்றைய சூழலில் ஈழத்தை உலகநாடு பேசாது. தமிழகத்தின் கிடுக்கி பிடியில் இந்தியாவின் ஆளும் அதிகாரம் சிக்கும்வரை அது சாத்தியம் இல்லை.

அப்படிச் சிக்கும் போது அதைச் செயல்படுத்த தமிழன் ஒருவன் இந்த அதிகாரத்தின் உட்சியில் இல்லாதவரை இது சாத்தியம் இல்லை. எனவே களத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் விடுதலையே, ஈழவிடுதலை என்பதை நான் உளமார நம்புகிறேன்.

இன்றைய தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய அரசியலையும், ஈழ விடுதலையும் செயல்திட்ட வரைவில் கொண்டுவந்து களமாடிக் கொண்டு இருக்கிறது நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமையும்.

சித்தாந்த ரீதியில் தனிக்கட்சி வைத்து கூட்டணிக்கு ஏங்கி அதற்காக இனவிடுதலை இலட்சியத்தைச் சமரசம் செய்து கொண்டவர்களைப் பற்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு கவலை இல்லை.

இருந்த போதும், இங்கே கட்சி கடத்த, கழகம் நடத்த, தொண்டு நிறுவனம் நடத்த உங்களிடம் இருந்து எவளவோ இங்கே உள்ள திராவிட அரசியல்வாதிகளும், திராவிட இயக்கவாதிகளும் எதிர்பார்த்து அதைப் பூர்த்திசெய்துகொண்டும் உள்ளனர்.

ஆனால் இன்றைய சூழலில் தமிழக அரசியல் அதிகாரமே ஈழவிடுதலையை அமைக்க இருக்கும் வழிகளில் முதன்மையானது என அறிந்துகொண்ட பின்னரும், நம்மை கொன்றொழித்தவர்களோடு, கூட்டணியும், அதற்கு ஆதரவாகக் களத்தில் களமாடலும் தொடர்கிறது என்பதை நீங்கள் உணருங்கள்.

உங்களிடம் ஓயாது பேசி தனக்கான பொருளாதார தேவைகளைச் சீர்செய்து கொள்ளும் தமிழக திராவிட கட்சிகளுக்கும், திராவிட இயக்கங்களுக்கும், போலி திராவிட தொண்டுநிறுவன தலைமைகளுக்கும் தொலைப்பேசியில் அழைத்து கேட்டுப்பாருங்கள்.

நீங்கள் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் உங்களின் ஈழ உணர்விற்கு இணங்க எடுத்த முடிவு என்ன ? உங்களின் தேர்தல் முடிவின் பின்னணி “தனித்தமிழீழ சோசலிச குடியரசை” உருவாக்க எப்படி உறுதுணையாக இருக்கும்? என்று கேட்டுப்பாருங்கள். அவர்களின் பதில்களில் புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் யாரென்று.

நான் இதை உங்களுக்கு எழுதுவது, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஈழ உணர்வு சக்திகளும் நாம் தமிழர் கட்சியையும் அண்ணன் சீமானையும் ஆதரிக்கச் செய்ய வேண்டும் என்பதல்ல.

மாறாக அவர்கள் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ சீமானையும் தமிழ்த் தேசிய அரசியலையும் எதிர்க்கவேண்டிய அவசியம் என்ன ? இதையும் தாண்டி இந்த சந்தர்ப்பவாதிகள தமிழர் தேசிய இனத்தின் உயரிய இலட்சியமான ஈழ விடுதலையை தனது அரசியல் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

அயலகத்தில் நீங்கள் அகதியாகவோ அல்லது குடியுரிமை பெற்ற குடிகளாகவே வாழ்ந்தாலும், உங்கள் கையில் புலங்குகின்ற டாலர் மற்றும் யூரோக்களும் வாசனைகள் ஒரு போதும் தாய்மண்ணின் வாசத்தையும் தனக்கென்று விடுதலைப் பெற்ற தேசத்தையும் தந்துவிடபோவதில்லை என்பதை என்னைப்போலவே நீங்களும் அறிவீர்கள்.

அதே நேரத்தில் நம்மை ஏமாற்றி, ஏய்த்துப் பிழைக்கும் சக்திகளை இனம்கண்டு ஒதுக்குவதும், நமது விடுதலை இலக்கையே முதன்மையாகக் கொண்டு நகரும் சக்திகளை ஆதரித்து நிற்பதும் களத்தின் தேவை என்பதை உணரவும்.

இந்தக் கடிதத்தின் மூலமாக உங்களின் இதயத்தோடு பேசுகின்ற வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்கிறேன். இதில் தவறுகள் ஏதுமிருந்தால் உங்களோடு விவாதிக்கவும் விரும்புகிறேன்.

இனவிடுதலை களத்தில்…தமிழீழ தாயக கனவில்…என்றும் உங்களோடு.

செந்தில்நாதன் சேகுவேரா

-http://www.tamilwin.com

TAGS: