பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று கோலாலும்பூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், எனினும், அவருடைய உடல்நிலையில் கவலைகொள்ள ஏதுமில்லை என பேபாஸ் அன்வார் இயக்கம் கூறியது.
அன்வாரின் இரத்த அழுத்தம் நிலையற்றிருந்தாலும் அதற்குச் சிகிச்சை அளிக்கும் வசதி சுங்கை பூலோ சிறைச்சாலை மருத்துவ மனையில் இல்லை என்பதாலும் நேற்று பிற்பகல் மணி 3க்கு அவர் கோலாலும்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
“அங்கு இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது”, என அவ்வியக்கம் இன்று அதன் முகநூலில் பதிவிட்டிருந்தது.
அன்வார் கோலாலும்பூர் மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார் என அவரின் வழக்குரைஞரும் பிகேஆர் எம்பியுமான சிவராசா கூறியதை அடுத்து அன்வாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாய் வதந்திகள் புறப்பட்டன.
அன்வாரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று மருத்துவமனை சென்று தம் கணவரைச் சந்தித்தார்.