போர் குற்ற நடவடிக்கை: ஜமாத் கட்சி தலைவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய வங்கதேசம்

rahman nijameeவங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் கட்சியின் தலைவர் ரஹ்மான் நிஜாமிக்கு பாலியல் வன்முறை, இன அழிப்பு, படுகொலைகளுக்கு தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலைக்கு எதிராக போர் குற்றத்தில் ஈடுபட்டதாக நிஜாமி கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் ஜமாத் கட்சி தலைவர் நிஜாமியை வங்கதேச அரசு தூக்கிலேற்றி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

இதனையொட்டி டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றும் நாட்களில் ஜமாத் கட்சியினரால் கடுமையான வன்முறைகள் நடந்துள்ளதாலும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாலும் இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வங்கதேச விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிஜாமிக்கு போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே இருந்தது.

இதுகுறித்து உள் விவகாரத்துறை அமைச்சர் அசாதுஜமான் கூறுகையில், நிஜாமி தனக்கான கடைசி வாய்ப்பாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும்படி கேட்கப்பட்டது.

அவர் கருணை கோரவில்லை. எனவே, மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நிஜாமி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

-http://news.lankasri.com