அகதிகள் முகாம்களில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்

syrian-refugee-crisis-dataஜேர்மனியில் அகதிகள் முகாம்களில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ அகதிகள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட Open Doors என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு, திங்கள் கிழமையன்று பெர்லினில் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதில், அகதிகள் முகாம்களில் உள்ள 80 சதவிகித கிறிஸ்தவ அகதிகள், முஸ்லிம் அகதிகளால் துன்புறுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக இரான் மற்றும் ஆப்கனை சேர்ந்த கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய நபர்கள் பெருமளவில் பிரச்சனைகளை சந்தித்துள்ளனர்.

Open Doors அமைப்பின் தலைவர் Markus Rode கூறுகையில், அகதிகள் முகாம்களில், பல்வேறு விதமான மத நம்பிக்கைகள் உடையவர்களுக்கு எதிராக பாகுபாடும் வன்முறையும் நிகழ்கிறது.

அதிலும் மதம் மாறியவர்கள் மீது வன்முறை அதிகளவில் நடக்கிறது. அவர்களை தீவிர முஸ்லிம்கள், துரோகிகளாக பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

231 அகதிகளில் பாதி பேரிடம் கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட்ட நேர்காணலில், அவர்கள் அகதிகள் முகாம்களில் உள்ள காவலர்களால் தாக்கப்பட்டதாகவும், பாதுகாப்பற்ற உணர்வுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதிபர் அங்கேலா மேர்க்கெலின் கிரிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU), செய்தி தொடர்பாளர் Franz Josef Jung இதுபற்றி கூறுகையில், இந்த கண்டுபிடிப்புகளை நான் தீவிரமாக எடுத்து கொள்ள போகிறேன்.

அகதிகள் அவர்களின் தாயகத்தில் சந்தித்த பிரச்சனைகளை போல் இங்கும் சந்திக்க கூடாது. எங்கள் கட்சி ஏற்கனவே இதுபோன்றவற்றை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதரீதியாக நடக்கும் குற்றங்கள் மற்றும் தாக்குதல்களை தனியாக பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புராடெஸ்டான்ட் ஆயர் ஒருவர் ஆய்வு எடுத்தவர்களிடம் கூறுகையில், முஸ்லிம் தொழுகைகளில் பங்கேற்காத கிறிஸ்தவ அகதிகள் மிரட்டப்பட்டது தொடர்பான வழக்குகள் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

Open Doors அமைப்பு இந்த ஆய்வின் மூலம், இனி வரும் காலங்களில் கிறிஸ்தவ அகதிகள் மற்றும் மற்ற சிறுபான்மை அகதிகள் தனித்தனி அகதி மையங்களில் குழுவாக வைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சிறுபான்மை அகதிகள் மீது தாக்குதல்கள் நடப்பதும், மிரட்டல்கள் விடப்படுவதும் இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம், பெர்லினில் உள்ள ஓரினச் சேர்க்கை அறிவுரை மையம் விடுத்த எச்சரிக்கையில், அகதி முகாம்களில் உள்ள ஓரினச் சேர்கையாளர்கள் பாகுபாடுகளை சந்தித்ததாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

-http://news.lankasri.com