4 கோடியைத் தாண்டியது உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை: அதிர்ச்சி அறிக்கை

refugee_list_001போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவைச் சேர்ந்த “உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம்’ வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உள்நாட்டுப் போர் காரணமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வசிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 4.08 கோடியைத் தாண்டியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவு மிக அதிக எண்ணிக்கையாக உள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் எழுச்சிக்குப் பிறகு தான் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்தது.

கடந்த ஆண்டு 86 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் 48 லட்சம் பேர் ஆவர்.

மேலும், ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொலம்பியா, காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், உக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெறும் போர் காரணமாக அதிக அளவில் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.

போர் தவிர, இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் 1.92 கோடி பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி, உள்நாட்டு அகதிகளாக வசித்து வருகின்றனர்.

இந்த வகையில் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் தான் அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com