வருமா மாற்றம்……!

naam_tamilar_bannerதமிழக தேர்தலுக்கு இன்னமும் ஓரிரண்டு நாட்களே இருக்கின்றன. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு தேர்தலாக இருக்கிறது. இத்தனைக்கும் இது ஒரு மாநிலத்தின் சட்டசபைக்கான தோதல் என்றாலும்கூட இதன் மூலம் எவர் வருவார்கள் என்ற படபடப்பு 2011 சட்டசபை தேர்தலை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர் மத்தியில் இந்த முறை சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்புகளும், கவனக்குவிப்பும் மிகமிக அதிகம்.

எதனால் இப்படி புலம்பெயர் தமிழர்களும், தாயகத்தில் வாழும் தமிழர்களும் இந்த தேர்தலில் தமது தீவிர கவனத்தையும் எதிர்பார்ப்பையும் குவித்துள்ளார்கள் என்பதற்கு வேறெங்கும் காரணத்து போகத் தேவையில்லை.

காரணம் மிக சுலபமாக கண்டறிய கூடியதே. 2009 பேரழிவு, இனஅழிப்புக்கு பின்னர் மிக பின்னடைந்து போன தமிழர்களின் உரிமைப் போராட்டம் தனது அடுத்த கட்டமாக சர்வதேச அரங்கில் நீதி கேட்ட ஒரு பொறிமுறையை முன்வைத்தது.

மிக நம்பிக்கையுடனேயே காத்தும் இருந்தது. ஆனால் கடந்த ஏழு வருடங்களாக தட்டிக்கழிப்புகளும், நீர்த்துப்போன, பிரேரணைகளும், காலங்கடத்தும் விசாரணை முறையும் என்று தமிழர்கள் பெரிதும் நம்பிக்கையை இழந்திருக்கும் ஒரு தருணம் இது.

எதாவது ஒரு பலம், அது ஆயுத பலமோ, அன்றி மக்கள் எழுச்சி என்ற பலமோ அதுவும் இன்றி ஏதாவது இயற்கை வளம் என்ற பலமோ என்று எதுவுமே இப்போது இல்லாத நிலையில் ராஜதந்திரம் என்பதும் வெறும் வெற்று வார்த்தை உச்சாடனம் மட்டுமே என்பதையும் எமது மக்கள் புரிந்துணர தொடங்கி இருக்கும் நற்பொழுதும் இதுதான்.

இந்த நிலையில் தமிழீழ தாயகத்துக்கு வெளியே இருக்கும் பலத்தில் அதிமுக்கியமானது, சாத்தியமானது தமிழ்நாட்டு தமிழர்களின் பேரெழுச்சி ஒன்றுதான் என்பதை உணர தொடங்கி இருக்கும் நேரமிது.

அத்தகைய தமிழ்நாட்டில் யார் புதிதாக ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பதே அடுத்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளுக்கான தமிழர் எழுச்சியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்.

அதிலும் யார் வென்று ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் மிக முக்கியமானது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது இந்த 2016 சட்டசபை தேர்தல்.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் கட்சிகளான திமுக, அதிமுக என்பன வழமைபோலவே தமது பணம் வீசி வாக்கு பொறுக்கும் ஜனநாய பெரும் கடமையுடன் தேர்தலில் குதித்துள்ளார்கள்.

சென்ற தேர்தல்களில் இந்த இரண்டு கட்சிகளுடன் தொங்கி கொண்டே தேர்தலில் கூட்டு அமைத்திருந்த கம்யூனிஸ்ட்டுகள் (பாவம் கார்ல் மார்கஸ்) ,மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், தேதிமுக என்பன இம்முறை ஒன்றாக ஓரணியாகி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் இறங்கி இருக்கிறார்கள்.

மத்தியில் முன்னாள், இந்நாள் ஆட்சி கட்சிகளான காங்கிரஸ், பாஜக என்பன வழமை போலவே இம்முறையும் ராஜகோமாளிகளகவே….! தயாரித்து முடிவடைந்து வெளியிட தயாரான தமிழ் திரைப்படங்களை கூட தயாரிப்பாளர்கள் தேர்தல் முடிந்த பின் வெளியிடலாம் என்று வெளியிடாமல் இருக்கிறார்கள்.

(இத்தனைக்கும் படம் பெட்டிக்குள் இருக்கும் ஒவ்வொரு நாளும் வட்டி எகிறும் என்றாலும் பரவாயில்ல என்று) ஏனென்றால் திரைப்படங்களின் காமெடி காட்சிகளை தூக்கி கடாசி சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடக்கூடிய பல பல காட்சிகள் தினமும் பல கட்சிகளின்பிரச்சார மேடைகளில் நடக்கிறதே இதில் திரைப்படத்து யார் வருவார்கள்?

இப்படியான கூத்துகளுடன் ஒரு பெரும் திருவிழாவாகவே தேர்தல் களை கட்டியபடி நகர்கிறது. சரி அது கிடக்க இம்முறை தமிழக தேர்தலை புலம்பெயர் தமிழர்களும், தமிழர் தாயக தமிழ் மக்களும் கூர்ந்து கவனிப்பதன் இன்னுமொரு முக்கிய காரணம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் முதல் முறையாக தேர்தல் புகுந்துள்ளதாலேயே.

ஈழத்தமிழர்களால் புறந்தள்ள முடியாத ஒரு தோழமை சக்தியாக சீமான் உருவெடுத்தது அவரின் அனல்பறக்கும் பேச்சுகளாலும், அடிக்கடி சிறைக்கு செல்லும் ஒரு தெருமுனை போராட்ட அமைப்பாக தமிழர்களுக்கு இருந்ததாலுமே.

2009 மே மாதத்துக்கு பின்னர் எல்லாம் இழந்துவிட்டோம், இனி என்ன என்ற அங்கலாய்ப்புடன் பேரிடி தாக்கிய பெரு மரங்களாக ஒவ்வொரு தமிழனும் துவண்டு நின்ற வேளையில், மனஉறுதி குலைந்திருந்த பொழுதில், மெதுவாக எழுந்து திடீரென அனலாக மாறும் அந்த சீமானின் பேச்சே ஏராளம் பேருக்கு ஒருவிதமான ஒத்தடமாக இருந்திருந்தது.

மீள எழுவதற்கான ஏதோ ஒரு ஊன்று கம்பாக இருந்தது மறுக்க முடியாது. ஒவ்வொரு மேடையிலும் தேசியத் தலைவரின் படம், பேச தொடங்கும் போதும் பேச்சின் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திலும் என்று எங்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் மகோன்னதத்தை மேடைகளில் பேசியது ஒருவிதமான மின்னல் கீற்றாக காரிருளில் தோன்றியது என்பதும் உண்மையே.

இத்தனைக்கும் சீமான் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும்கூட கடந்த ஆறு வருடங்களாக தமிழின எழுச்சி ஒன்றை மட்டுமே மேடைகளில் பேசிபேசி தனது கட்சியை அவர் உருவாக்கிய விதம் ஆச்சர்யம் அளிக்கிறது.

அதிலும் அவரின் கட்சியின் பல முன்ணணி தோழர்கள் என்னுடன் கதைக்கும் போது அவர்களின் மனதின் உள் அறைக்குள் இருந்து வெளிவரும் தமிழின உணர்வு, தமிழர்க்கு என்று ஒரு தாயகம் என்ற பேரவா என்பனவற்றின் மீது எந்தவொரு அரசியல் நாற்காலி கனவையும் நான் கிஞ்சிற்றும் காணவில்லை.

அந்த வகையில் தலைமை நிலையிலுள்ள தான் மட்டுமின்றி தனக்கு அடுத்துள்ள நிலை தோழர்களையும் உறுதியுடன் செதுக்கிய சீமானின் உழைப்பு மெச்சத்தக்கதே.

இந்த நிலையிலேயே சீமானின் நாம் தமிழர் இம்முறை தேர்தலை சந்திக்கிறது.

சுயாட்சி அதிகாரங்களற்ற, மத்திய ஆட்சி நினைத்தால் எந்த நேரமும் கலைத்து விட்டு எல்லை பாதுகாப்பு படையையும், மத்திய ரிசர்வ் காவல்துறையையும் அனுப்பி மாநிலத்தை ஒருவிதமான ஜனநாயக ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்கலாம் என்பன போன்ற வலு குறைந்த அதிகாரங்கள் நிறைந்த ஒரு அவைக்கான தேர்தல் என்றாலும் கூட ஏதோ சில முக்கியத்துவங்கள் இந்த முறை தேர்தலுக்கு வந்து வாய்த்திருக்கிறது.

மது விலக்குக்கு எதிராக போராடிய சசிபெருமாளின் மரணத்துக்குப் பின்னர் உருவான மக்கள் நலக்கூட்டு என்பது மக்களின் நலனை பெயரில் வைத்திருந்தாலும் கூட அதில் ஒன்றொக்கொன்று எதிரும்புதிருமான சக்திகளே கை கோர்த்து இருந்தன.

அதிலும் தமிழ் இனஅழிப்பின்போது இந்திய மத்திய ஆட்சியில் அரியணை சுகம் கண்டிருந்த ஜி.கே.வாசனை அரவணைத்து விபீசண மன்னிப்பு கொடுத்ததன் மூலம் இவர்களின் தமிழின பாசத்தின் வேசம் தெரிகிறது.

மற்றது கருணாநிதி, 2013ல் தமிழ்நாட்டையே சுழற்றி அடித்த மாணவர் எழுச்சியில் எங்கே கட்சியே காணாமல் போய்விடுமோ என்று அஞ்சி அதுவரை இருந்த இனஅழிப்பு கூட்டணியை ‘கூடாநட்பு ‘ என்று சொல்லி உதறி வந்த முத்துவேலர் கருணாநிதி இப்போது மீண்டும் அதே கூடாநட்பை பொன்னாடை போர்த்தி 41 தொகுதிகள் தாரளமாக ஒதுக்கி தன்னுடன் சேர்த்துள்ளார்.

ஜெயலலிதாவோ என்னதான் வெள்ளப்பெருக்கு, மக்கள் அழிவு, ஆணவ படுகொலைகள், என்று தமிழ்நாடே தீயாக எரிந்தாலும் இது எதனையும் தெரிந்தும் தெரியாதவர் போல அதே ரோமானிய நீரோ பாணியிலான வான் உலாவாகவே வலம்வருகிறார்.

அதே முதுகு வளைந்து நிலம் நோக்கி முகம் பார்த்து கரம் கூப்பும் அமைச்சர் பெருமக்களே அவரது பிரச்சார பலம் என நினைக்கிறார்.

இப்படியான கட்சிகளுக்கிடையில் சீமானின் நாம்தமிழர் முழு தமிழ்நாடு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தே வேட்பாளரை அறிவித்து இறங்கி இருப்பது நல்ல ஒரு முன்னுதாரணம். எல்லா கட்சிகளுமே இந்த தொகுதியில் இன்ன சாதிமக்களே அதிகம்.

ஆகவே அந்த சாதி வேட்பாளரையே போடும் வழமையை தொடர்ந்து கடைப்பிடிக்க நாம்தமிழர் கட்சி கூடுதலான தொகுதிகளில் இந்தவிதமான எந்தவொரு சாதிக் கணக்கும் பார்க்காமல் தமது அமைப்பில் வேலை செய்தவர்கள், உறுதியானவர்கள் என்று நம்பியவர்களையே வேட்பாளராக நியமித்து இருப்பது மிக வரவேற்கத்தக்க ஒன்று.

நாம் தமிழர் அமைப்பின் பிரச்சாரம் என்பது தன் எழுச்சியாக முன்வந்த இளைஞர்களை கொண்டே உருவாக்கப்பட்டிருப்பது பல தொகுதிகளின் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் நண்பர்களுடன் கதைத்த போது தெரிந்தது.

1977ல் ஈழத்தில் நடந்த தேர்தலில் ஒரு இளைஞர் பெரும் சக்தி எப்படி தன்னை முழுநேரமாக உள் இறக்கி வேலை செய்ததோ அதே ஈடுபாட்டையே இப்போது நாம் தமிழர் கட்சியின் பல தொகுதிகளில் அறிய முடிகிறது.

பெரும் கட்சிகள் கோடி கணக்கில் பணத்தை செலவு செய்து என்னம்மா இப்டீ பண்ணீட்டீங்களே பாணி விளம்பரங்களை தினசரி நாளிதழ்களில் கொடுத்து தமக்கு வாக்கு சேர்க்கும் போது நாம் தமிழர் கட்சிக்கு அந்த அந்த தொகுதியின் இளைஞர்கள், கட்சிசாராத மாணவர்கள் தமது கைக்காசை செலவழித்து துண்டுபிரசுரம் (பிட் நோட்டீஸ்) அடித்து குடிசைகள், வீடுகள், அடுக்குமனைகள் என்று ஏறி இறங்கி பிரச்சாரம் செய்வது எழுச்சிமிகு மாற்றம்தான்.

( தேர்தலுக்கு பின்னும் இதே வேகம் தொடரவேண்டும்) அத்துடன் நாம் தமிழர் கட்சியின் பெரும் பலமே இவ்வளவு நாளும் திராவிட என்ற பெயருடன் ஆட்சி புரிந்தவர்களின் கையாலாகத் தனத்தை மேடைகளில் வெளிச்சம் போட்டு காட்டுவதே.

அதிலும் சீமானின் உரை நிச்சயம் கேட்பவர்களை சிந்திக்க தூண்டும். தமிழர்களின் தனித்துவமான தேசிய இன அடையாளங்களை பற்றி அவர் பேசுவதை இனவாதம் என்றால் அப்படி சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும்.

அவர்கள் விரும்பினால் முல்லை பெரியாற்றை மறிக்கும் கேரளத்துடனும், காவிரியாற்றின் குறுக்கே மேகதூத்தில் அணைகட்டி ஓரவஞ்சம் புரியும் கன்னடத்தையும், செம்மரம் கடத்தல் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்றுவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் ஆந்திரகாருவுடனும் இணைந்து ஒரு திராவிட பெரு நாட்டுக்கு போரிடட்டும்.

(ஆனால் சீமான் மறந்துபோயும்கூட ஒரு வசனம்கூட பெரியாரை பற்றி கூறிட வேண்டாம். பெரியார்.. யாராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும். அவர் தாய்மொழி எதுவாக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் முதிர்ந்த வயதிலும் தனது ஏராளம் உடல் உபாதைகளுடனும் தொடர்ந்தும் பெரியார் போரடியது இந்த தமிழினத்தின் மத்தியில் முளைத்திருந்த சாதிவெறியையும், மூடத்தனத்தை நீக்கவுமே. வேறு யாருக்காகவும் அல்ல..)

சரி இனி வாக்காள பெருமக்களை நோக்குவோம். இம்முறை 5கோடி 85லட்சம் வாக்காளர்கள் தமிழக சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களில் 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்கள் 1கோடி 17 லட்சம் பேர் வாக்களிக்க தகுந்தவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் 18 வயதுக்கும் 19வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாள 21 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்க தகுந்தவர்களாக இருக்கிறார்கள்.

தமிழிண உணர்வு, புதிய மாற்றத்துக்கான ஒரு முன்னுரை என்று இவர்கள் வாக்களித்தால் நிச்சயம் சீமானின் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க அளவு வீதவாக்குகளை பெறும். ஆனால் இந்த வயதினரை வாக்களிப்பு நிலையத்து வரவழைப்பதுதான் மிக கடினம்.

தொடர்ந்த திராவிட பெயர் சூடிய கட்சிகளின் கோமாளித்தனத்தாலும், மாக்சிசம் பேசிய கம்யூனிஸ்டு கட்சிகளின் ராஜகோமாளித்தனத்தாலும் வேண்டாமப்பா இந்த வாக்கு விளையாட்டு என்று ஒதுங்கி இருக்கும் இளைய சக்தியை நாம் தமிழர் கட்சி எப்படியாவது வாக்களிப்பு பெட்டிக்கு அருகில் அழைத்துவந்தாலே போதும். மாற்றம் நிகழும்.

அது முடியாத பட்சத்தில் நாம் தமிழர்கட்சிக்கு பத்துவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதியும் அபாயமுள்ளது. நாம் தமிழர் கட்சியினருக்கு எந்த வகையிலும் இந்த தேர்தல் இப்போதே ஒரு வெற்றிதான்.

தமிழ்த் தேசியம் சார்ந்து ஒரு பலமான குரலை ஒலிக்க தொடங்கி உள்ளார்கள். சில வேளைகளில் இந்த குரலுக்கு உரிய அங்கீகாரம் இந்த தேர்தலில் கிடைக்காது விடினும் இந்த தேர்தலும்அது தந்த பாடங்களை கவனத்தில் கொண்டு மேலும் உறுதியாக போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் வேலை செய்தால் நிச்சயம் 2021 ல் தமிழினம் சார்ந்து ஒரு ஆட்சிக்கு முயலலாம்.

ஆனாலும் வெறுமனே இந்த தேர்தல் அரசியல் மூலம் தமிழினத்தின் விடுதலையையோ பெரு மாற்றம் எதனையுமோ நிகழ்த்திவிடலாம் என்று நாம் தமிழர் கட்சியினர் நம்பி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஆனாலும், தமிழின அடையாளத்தை மீட்டெடுப்பதற்கு ஒரு சிறு முயற்சியாக இந்ததேர்தல் பாதை இருக்கும் ஓரளவுக்கு. பாதை வெளிக்குமா என்பது 19ம்திகதி தெரிந்துவிடும்.

-http://www.tamilwin.com

TAGS: