சிங்களக் குடியேற்றம் உண்மையா? பொய்யா? யாரை நம்புவது?

maddakalappuமட்டக்களப்பு மாவட்ட எல்லையில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறுவது சம்பந்தமான செய்திகள் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தி உண்மைத்தன்மையற்றது என கூறி மறுப்பறிக்கை ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் இந்த மறுப்பறிக்கை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் புத்திஜூவிகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரிடையே பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு இது மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறுவதாக வெளியான செய்தியுடன் அதற்கான ஆதாரமாக வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்த நிலையில்,

சமூகநோக்குடன் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் செய்திகளை உண்மைத்தன்மை அற்றது என கொச்சைப்படுத்தி ஊடகவியலாளர்களை முடக்க நினைப்பது வேதனையே.

இந்த செய்திக்குறிப்பின் ஊடாக மக்களையும் அரசியல் வாதிகளையும் முட்டாள் ஆக்குகின்ற நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையான மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதுடன் அங்கு பொளத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது என்று அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மைத்தன்மையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த செய்தி உண்மையானதே என்று சம்பவ இடத்திற்கு அரசாங்க அதிபருடன் நேரில் சென்ற கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையான மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதுடன் அங்கு பொளத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதை நாங்கள் நேரில் கண்டோம். இது குறித்து முடிவு செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை எதிர்வரும் 19ம் திகதி நடாத்தவுள்ளோம்.

இதற்கிடையில் நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று அத்துமீறிய குடியேற்றவாசிகளுடன் பேசிவிட்டு அதிகாரிகள் அனைவரும் சென்றவுடன் பண்ணையாளர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது, அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இந்த பிரதேசத்திற்கு முதல் தடவையாக இப்போதுதான் இந்த அரசாங்க அதிபர் வருகை தந்துள்ளார் என்று.

இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, முதலமைச்சர் சென்றபோதும் நான் போகாதது இந்தவிடயத்தை அரசியலாக்கக் கூடாது என்பதற்காகவே என்று.

எது எப்படியோ குறித்த சட்டவிரோத குடியேற்றம் பற்றி கலந்துரையாடும் கூட்டம் 19ம் திகதி நடைபெறவுள்ளதால் அங்கு இது குறித்த தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்றார்.

சிங்கள குடியேற்றம் குறித்த செய்திக்கு அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்ட மறுப்பறிக்கை

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய குடியேற்றங்கள் என்ற தலைப்பில் வெளியான ஆக்கத்தில் உண்மைத்தன்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடைப் பண்ணையாளர்கள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்பட்ட தங்களது கால்நடைகள் கொல்லப்படுவதாகவும் காணாமல் போவதாகவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் அந்த இடத்தினை பார்வையிடுவதற்காகச் சென்றார்கள்.

அங்கு சென்ற போது சில பருவகால சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி இந்த கால்நடைகளுக்கு ஏற்படும் இடையூறை தடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களோடும் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனவே குறிப்பிட்ட செய்தி சில ஊடகவியலாளர்களின் ஊகங்களுக்கு உட்படுத்தப்பட்டு, திரிவுபடுத்தப்பட்டு இனங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் மாவட்டங்களுக்கிடையேயும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த செய்திகளை வெளியிடுகையில் சமூகப் பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் சரியாக உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுவது சிறப்பானது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: