இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் நாங்கள் கட்டாயம் இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் பிரசன்னமும் வடக்கில் காணப்படுவதாலும் சிங்களப் பொலிஸார் இங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அதிகாரம் எங்களுடைய கைகளில் இல்லை.
ஆயிரக்கணக்கான இராணுவம், கடற்படை என்பன இங்கு குவிக்கப்பட்டிருந்தும் கூட இவ்வாறான பிரச்சினைகள் இங்கு தொடர்கின்றன என்றால் இங்கு ஏதோ ஒன்று நடக்கின்றது. ஏதோ ஒரு இடத்தில் பிரச்சினை இருப்பதுபோல் எமக்குத் தெரிகின்றது.
வடக்கிலுள்ள இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் எமக்கு கிடைத்தால் யாழ் குடாநாட்டில் அரங்கேற்றி வரும் இவ்வாறான வன்முறைச் செயல்களை கட்டாயம் கட்டுப்படுத்திக் காட்டுவோம். அதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றும் அவர் கூறினார்.
யாழ். குடாநாட்டில் வன்முறைகள் மற்றும் வாள்வெட்டு கலாசாரம் தலைதூக்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த வடமாகாண சபை எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
வடக்கில் படையினரை முடக்கி வைப்பதால் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஆகவே படையினரை வ6டக்கிலிருந்து முற்றாக வெளியேற்ற வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கசின்றோம்.
ஏனென்றால் தற்பொழுதும் படையினர் முகாமுக்குள் முடங்கி இருப்பதாகத்தான் கூறுகின்றார்கள். ஆனால் நாளாந்தம் ஆறு, ஏழு இராணுவத்தினர் சைக்கிளில் உலா வருகின்ற நிலைமை தொடர்கின்றது. இதனால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆகவே முடக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கின்றேன்.
என்னுடைய மாணவனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவிராஜை சுட்டுக்கொன்று விட்டு சுட்டவர்கள் இராணுவ முகாமுக்குள் திரும்பி விட்டனர் என்றும் முதலமைச்சர் கூறினார்.
65ஆயிரம் பொருத்து வீடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் வீடுகளைக் கேட்கின்றார்கள் என்று புனர்வாழ்வு அமைச்சு கூறுகிறது அது உண்மைதான்.
மக்கள் வீடுகளைக் கோருகிறார்கள் தான் ஆனால், மக்கள் 2.1 மில்லியன் பெறுமதியில் சூழலுக்குப் பொருத்தமற்ற இவ்வாறான வீடுகளைக் கேட்கவில்லை.
அத்துடன் இதற்கான மாற்றுத் திட்டம் ஒன்றையும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அதாவது எங்களுடைய பொறியியலாளர்கள் இந்த 2.1 மில்லியன் ரூபாவில் திறமான இரண்டு வீடுகளைக் கட்டுவது தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்கள் .
ஆகவே நாங்கள் தற்போது அறிக்கையை பரிசீலித்து வருகிறோம் என்றார்.
வடமாகாணசபை தொடர்பில் ஒரு சில அரசியல்வாதிகள் தெரிவிக்கும் குறிறச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அரசியல்வாதிகள் எமக்கு அரசியல் அனுபவம் இல்லை, முறையாக நிர்வாகம் நடத்த தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள்.
நாங்கள் பணத்தையும், பலத்தையும் முறையாகவே பயன்படுத்துகின்றோம். அத்துடன் இவ்வாறு குறைகூறும் அரசியல்வாதிகள் எதையும் நினைத்தவுடனேயே உடனடியாக செய்ய வேண்டும்.
அதுவே அதிகாரத் திறமை என நினைக்கிறார்கள். ஆனால் நாங்களோ அவ்வாறு நினைக்கவில்லை. இது மக்களுக்கு நன்மை பயக்கும், எது சட்டரீதியானது, எதை மக்கள் வரவேற்பார்கள், எது தூர நோக்கில் மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் என்பவற்றை ஆராய்ந்தே நாங்கள் சடவடிக்கை எடுக்கின்றோம்.
நாங்கள் தான்தோன்றித் தனமாக எதையும் செய்வதில்லை என்பதை முதலில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
-http://www.tamilwin.com