இந்திய எல்லையில் சீனப் படைகள் குவிப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

india_china_map_20121022இந்தியாவையொட்டிய எல்லைப் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டில் சீனாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை பெண்டகன் தாக்கல் செய்தது.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திலுள்ள கிழக்கு ஆசிய விவகாரத்துறை துணை அமைச்சர் ஆபிரகாம் எம். டென்மார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவையொட்டிய எல்லைப் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதையும், அப்பகுதியில் முகாமிட்டுள்ள சீனப் படைகளின் தாக்குதல் திறன் அதிகரித்திருக்கப்பட்டிருப்பதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. சீனா எதற்காக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பதை கணிப்பது கடினமாக உள்ளது.
எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா-சீனா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதங்களுடன் தங்களது எல்லையில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்திருப்பது கவலையளிக்கிறது.
இதேபோல், உலகின் பிற பகுதிகல் இருக்கும் தனது தளங்களிலும் சீனா தனது ராணுவ வீரர்களைக் குவித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தானில் சீனா தனது ராணுவ வீரர்களை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் அண்மையில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மிகவும் ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.

இந்தியாவுடனான நட்புறவை மேலும் விரிவுபடுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சீனாவை கருத்தில் கொண்டு இந்தியாவுடனான உறவை அமெரிக்கா அதிகரிக்கவில்லை. இந்தியா உலக அளவில் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்து வருகிறது. ஆகையால், அந்நாட்டுடன் நாங்கள் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார் டென்மார்க்.

என்எஸ்ஜி விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
அணுசக்தி விநியோகிக்கும் நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இந்தியா உறுப்பினராவதற்கு, சீனாவும், பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் செய்தபோது, ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பின் தேவைகளை இந்தியா நிறைவேற்றிவிட்டதாகவும், என்எஸ்ஜியில் உறுப்பினராக இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்கா கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதை தற்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன் அவர் என்றார்.

-http://www.dinamani.com