வங்கதேசத்தில் 70 வயது பௌத்த மதத் துறவி அவரது மடாலயத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அந்த நாட்டின் பந்தர்பன் மாவட்டம், நாயக்காங்சாரி என்ற பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை வெளியிடுவோர், சிறுபான்மையினர் ஆகியோர் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நாயக்காங்சாரி காவல் நிலைய அதிகாரி காஜி அஷான் கூறியதாவது:
பௌத்த மதத் துறவி மாங் ஷோய் வூ-வின் மடாலயம், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது. அந்த மடாலயத்தில் அவர் தனியாகத் தங்கியிருந்தார். அவருக்கு காலை உணவு அளிப்பதற்காக சனிக்கிழமை மடாலயத்துக்குச் சென்ற சீடரொருவர், அவர் அங்கு அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாகக் கிடப்பதைக் கண்டார்.
மாங் ஷோய் வூ-வின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது என்றார் அந்த சீடர். இந்தப் படுகொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
ராஜ்ஷாஹி நகரில், 65 வயது சுஃபி இஸ்லாம் மத போதகரை இதே முறையில் மர்ம நபர்கள் கடந்த வாரம் வெட்டிக் கொன்றனர். முன்னதாக, அந்த நகரில் மிதவாத பேராசிரியர் ஒருவரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெட்டிக் கொன்றனர்.
-http://www.dinamani.com