அகதிகள் முகாம்கள் மீது தொடரும் தாக்குதல்: விழிபிதுங்கும் ஜேர்மன் நிர்வாகம்

germany_sam_001ஜேர்மனியில் அகதிகள் முகாம்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களால் அங்குள்ள நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளதுடன் அதை கட்டுப்படுத்துவதில் பிந்தங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் ஜேர்மனியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் மீது 45 முறை திட்டமிட்டே நெருப்பு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் அதிகாரிகள் கவலைதெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜேர்மனி அரசு 1.1 மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து நடந்த தாக்குதல்களை கணக்கிட்டால், அகதிகள் முகாம்கள் மீது மட்டும் 92 முறை நெருப்பு வைத்துள்ளனர். இது கடந்த 2014 ஆம் ஆண்டு வெறும் 6 எண்ணிக்கையிலேயே இருந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் வலதுசாரி அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என நிரூபிக்க விசாரணை அதிகாரிகளிடம் போதிய ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கியதில்லை.

மட்டுமின்றி பெரும்பாலான ஜேர்மனி ஊடகங்கள் தங்களது கருத்துப் பரிமாற்ற பக்கங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த பக்கங்களில் அகதிகளுக்கு எதிரான வன்முறையைத்தூண்டும் கருத்துக்களை பொதுமக்கள் பதிவிட்டு வந்ததே காரணம் என கூறப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலானா அகதிகள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டது அங்குள்ள பல்வேறு பிரச்சனைகளை தூண்டி விடவும் காரணமாக அமைந்தது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான வெறி எழுச்சி ஆகியவை அதிபர் மேர்க்கெலின் தாராளவாத குடியேற்ற கொள்கைக்கு கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வைத்தது.

-http://news.lankasri.com