புலம்பெயர் மக்களின் உதவியால் எழுச்சி பெறும் தாயக மக்கள்! சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா எம்.பி

canadaயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கான விவசாய வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள பெண்கள் கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா ஏற்பாடு செய்திருந்தார்.

கனடா வாழ் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளிற்கு ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியிலான விவசாய முயற்சிகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

அரசாங்கம் மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மக்களின் தேவைகளை முற்றுமுழுதாக நிறைவேற்றியுள்ளதாக வெளிநாடுகளுக்கு பொய்ப்பிரச்சாரங்களளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் எமது மக்களிற்கு கிடைக்க வேண்டிய உதவிகளை தடுத்து நிறுத்திய போதும், யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் எமது மக்களின் வாழ்வாதார எழுச்சியானது புலம்பெயர் எமது உறவுகளின் உதவிகளாலேயே சாத்தியப்படுத்தக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது மக்கள் தமக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை உச்ச அளவில் பயன்படுத்தி தமது பொருளாதார மேம்பாட்டினை அடைந்துகொள்ள வேண்டும். இதுவே உதவி புரியும் எம் புலம்பெயர்ந்த உறவுகளின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

இந்நிகழ்வில் கனடா வாழ் உறவுகளின் சார்பில் திரு செந்திலகுமரன், புதுக்குடியிருப்பு பிரதேச ஒளிரும்வாழ்வு அமைப்பினர் மற்றும் துணுக்காய் பிரதேச ஒளிரும் வாழ்வு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: