இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் திங்கள்கிழமை கூறியதாவது:
இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் சுமார் 45 சதவீதத்தை அரசுப் படைகள் மீட்டுள்ளன.
சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து 16 முதல் 45 சதவீதம் வரையிலான நிலப்பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும், அவர்கள் எந்தப் பகுதிகளில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் என்பதையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
லிபியா: லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசுப் படையினருக்கோ, கிளர்ச்சியாளர்களுக்கோ ஆயுதங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் எண்ணம் தற்போது அமெரிக்காவுக்கு இல்லை.
எனினும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டின் அரசு, ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.
லிபியாவில் கள நிலவரத்தை நன்கு அறிந்து கொள்ள உதவுவதற்காக, மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமெரிக்கப் படை வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர் என்றார் அவர்.
-http://www.dinamani.com

























