ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சாப் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் குண்டுவெடித்தது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சமயத்தில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில் 28 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 68க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள டோரா என்ற இடத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 22க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சதர் நகரத்தின் மீதும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூன்று இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் ஈராக் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
-http://news.lankasri.com