தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா நேற்றைய தினம் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளமை ஈழத்தமிழர்களுக்கு சாதகமானது என்பதை கூறித்தானாக வேண்டும்.
தமிழகத்தின் சட்ட சபையில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானங்களை நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் மீண்டும் செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக தெரிவாகியுள்ளமை ஈழத் தமிழர்களுக்கு பலத்த பக்கபலம் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
சட்டசபைத் தேர்தலின் போது கச்சதீவு முதல் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு வரை தேர்தல் பிரசாரத்தில் பிரஸ்தாபித்திருந்த செல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியுள்ளமை அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ் நாட்டு மக்கள் வழங்கிய ஒப்புதல் என்று கூறிக்கொள்ளலாம்.
எனவே, ஈழத்தமிழர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடனும் தமிழக மக்களுடனும் நல்லதொரு உறவைப் பேணிக்கொள்ள வேண்டும்.
பொதுவில் ஈழத்தமிழர்கள் அண்டை நாடுகளுடனான உறவிலோ அல்லது உள்நாட்டின் தென்பகுதியில் இருக்கக் கூடிய தமிழர் சார்புடைய சிங்கள மக்களுடனான உறவைப் பலப்படுத்துவதிலோ, இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கி தமிழர்களை எதிர்க்கண் கொண்டு பார்க்கின்ற நாடுகளுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி அதனூடு எங்களுக்கும் அவர்களுக்குமான விரிசலைக் குறைக்கின்ற ஏற்பாடுகளோ எங்களிடம் ஒரு போதும் இருக்கவில்லை.
மாறாக நாங்கள் சந்தர்ப்பவாதிகளாகவே மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகின்றோம். இதற்கு மேலாக அரசியல் இராஜதந்திரம் அறவே இல்லாதவர்கள் என்பதும் நிர்வாகப் பணிகளை செம்மையாகச் செய்யத் தெரியாதவர்கள் என்ற பெயருமே எங்களுக்குச் சொந்தமாக உள்ளது.
எனவே, இந்த நிலைமையில் இருந்து எங்களை நாம் திருத்தியும் மாற்றியும் கொள்ள வேண்டும். இதற்காக எங்களிடம் இருக்கக்கூடிய பலவீனம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது கட்டாயமானது. இதை நாம் செய்யத் தவறினால் எங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் கொஞ்சமேனும் கொண்டுள்ள அனுதாபமும் கரிசனையும் அறவே இல்லாமல் போய் விடும்.
சர்வதேசம் என்று கூறுவதை சற்று விரிவுபடுத்திப் பார்த்தால் எங்கள் புலம்பெயர் உறவுகள் கூட, எங்களின் அரசியல் தலைமை தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளன. நிதியைப் பெறும் நோக்குடனேயே தமிழ் அரசியல் தலைமை தங்களிடம் வருவதாகவும் அவர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலைமை அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. பொதுவில் தமிழ் அரசியல் தலைமையில் இருக்கக் கூடிய அதிருப்தி நிலைமையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நம்பிக்கைக்குரிய தலைவராக இருக்கின்ற வகையில், தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமை; தரமான அரசியல் இராஜதந்திரம் என்பவற்றை கட்டி எழுப்பி தமிழ் அரசியல் தலைமையை நெறிப்படுத்துகின்ற தார்மிகப்பணி வடக்கின் முதலமைச்சரிடம் உள்ளது.
எனவே, இவற்றைச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ள வடக்கின் முதல்வர், இந்தியாவுக்கு விஜயம் செய்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவருக்கு தமது வாழ்த்தை தெரிவிப்பதுடன் பிரதமர் மோடியையும் சந்திப்பது அவசியமாகும்.
-http://www.tamilwin.com