தமிழக முதல்வரை வடமாகாண முதல்வர் உடன் சந்திக்க வேண்டும்!

vikneswaran_jeya_001ஈழத் தமிழினத்தின் சாபக்கேடு இன்னமும் தீர்ந்தபாடில்லை. அவர் அந்தப் பக்கம், இவர் இந்தப் பக்கம் என்ற விமர்சனங்கள் ஒரு புறம்.

இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு எப்பாடுபட்டாவது தமிழினத்தை பலவீனப்படுத்துகிறோம் பார் என்போர் இன்னொரு பக்கம்.

உரத்துக் கதைக்க வேண்டிய தமிழ்ப் புத்திஜீவிகள் நமக்கென்ன என்பது போல தம்பாடு.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையை இயங்க விடாமல் காட்டுகிறோம் பார் என்று கச்சை கட்டி நிற்பது இன்னொருபக்கம்.

இதனிடையே தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் என்ன செய்கின்றனர் என்று எதும் தெரியாத அப்பாவித் தமிழ் மக்கள் மறுபுறமாக ஈழத் தமிழினத்தின் பாடு அந்தோ என்றாகிப் போகிறது.

இது தவிர அமெரிக்காவின் கருத்தை ஆதரிப்பவன் சி.ஐ.ஏ., இந்தியாவின் உறவைப் பலப்படுத்த வேண்டும் என்பவன் றோ. அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் என நினைப்பவன் துரோகி. புலிகளை ஆதரிப்பவன் பயங்கரவாதி. நடு நிலையைச் சொல்பவன் வெகுசன விரோதி. ஆக ஒட்டுமொத்தத்தில் தமிழினப் பற்றாளர் என்று எவருமே எம்மிடம் இல்லாதவாறு நாமே நமக்குப் பகையாகியுள்ளோம்.

சுயநலத்தின் பாற்பட்டு நாம் செய்த பிரசாரங்கள் எங்கள் தமிழ் மண் முழுவதிலும் கட்டுப்படுத்த முடியாத நோயாகப் பெருகிப் பரவி எம் இனத்தின் வேரைஅறுக்கிறது.

எங்கள் இனத்திற்கு ஏற்பட்ட அழிவை பதவிக்காக விற்பனை செய்வது என்ற நிலைமை வந்த போது எங்கள் இனத்திற்கு இனி விடிவேயில்லை என்பதாக நிலைமை மாறியது.

இத்தகையதோர் கட்டத்தில்தான் எங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தற்துணிவோடு சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் என்ற பார்வையை அடியோடு கைவிட்டு, தமிழினத்தின் நலன் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட வேண்டிய கட்டம் வந்துவிட்டது.

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் என்ன செய்தார் என்ற கேள்வி எழாமல், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒத்துழைக்காத போதிலும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனி மனிதராக நின்று சாதித்தார் என்று தமிழ் மக்கள் சொல்வதான சூழமைவை ஏற் படுத்துகின்ற பெரும்பொறுப்பு முதலமைச்சரிடமே உள்ளது.

இதை அவர் செய்தாக வேண்டும். காலத்தின் வேகத்தில் இதை விரைவாகச் செய்வதும் கட்டாயம்.

இவ்வாறு முதலமைச்சர் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பதை அவர் செய்வதே அவர் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஆற்றுப்படுத்தும்.

அதில் ஒன்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் இந்தியப் பிரதமர் மோடியையும் எங்கள் வடக்கின் முதலமைச்சர் உடனடியாக-அவசரமாகச் சந்திக்க வேண்டும்.

இந்த சந்திப்பு தென்பகுதியில் எமக்கு சாதகமான முடிவுகளைத் தரும் என்பதுடன் தமிழ் மக்களிடமும் ஒரு நேர்க்கணிய மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

-http://www.tamilwin.com

TAGS: