கடந்த முதலாம் திகதியன்று வெளியான அச்சு ஊடகமொன்றில் மயிலிட்டியை விடுவிக்க இராணுவம் கடும் எதிர்ப்பு என்ற பிரதான தலைப்பின் கீழ் வெளியான செய்தியில், மயிலிட்டி பிரதேசத்தை விடுவிக்க இராணுவம் கடும் எதிர்ப்பை காட்டியதாகவும் ஜனாதிபதி அவர்கள் மாற்றுவழி ஒன்றை மயிலிட்டி பிரதேச மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக முன் வைக்குமாறும் பணித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த செய்தி தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் நேரடி சந்திப்பின் போது கலந்துரையாடினேன் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது ,
கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எனக்கு கூறியது என்னவென்றால், இராணுவத்தினர் மயிலிட்டி பிரதேசம் தொடர்பில் எதிர்ப்பினையோ, காணி விடுவித்தல் தொடர்பான மறுப்பினையோ முன்வைக்கவில்லை.
நான் வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பாக கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். என்னால் வடக்கு மக்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பாக கொடுக்கப்பட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம். நீண்ட காலம் போர் நடைபெற்ற பிரதேசங்களாய் அவை காணப்படுவதால் அக்காணிகளை துப்பரவு செய்து பாதுகாப்பாக மக்களுக்கு கையளிக்க வேண்டியது என் பொறுப்பாகும்.
அதன் காரணமாகவே சிறிது தாமதம் ஏற்படுகிறது என ஜனாதிபதி கூறியதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக அங்கஜன் மேலும் தெரிவிக்கையில்,
மயிலிட்டி ,தையிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து தம் சொந்த நாட்டில் அகதிகளாக இரண்டாவது தலைமுறையாகவும் வாழத் தொடங்கி விட்டனர்.
இதனால் அவர்கள் உணர்வு ரீதியாக இழந்தவை ஏராளம். அதை நான் உணர்வேன். இந்த மக்களுக்கு தம் சொந்த நிலங்களில் வாழும் நிலையை எப்படியேனும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன்.
மயிலிட்டி தையிட்டி மற்றும் ஏனைய பிரதேச மக்கள் தம் சொந்த நிலங்களில் குடியேறும் வரைக்கும் நான் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருப்பேன்.
இதனால் மக்கள் யாரும் வீணாக கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com