இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் முனைப்போடு செயற்பட்டு வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமக்குக் காலம் தேவை. நினைத்தவுடன் மாற்றத்தை கொண்டுவருவதற்கு நாம் ஒன்றும் அலாவுதீன் அல்ல. மக்கள் நினைத்த மாற்றத்தை, இன்னும் 60 மாதங்களில் நிச்சயம் ஏற்படுத்துவோம்.
நல்லாட்சி மலர்வதற்கு முன்னர், ஜெனீவா, மின்சாரக் கதிரை என்ற விடயங்களே பிரதான கருப்பொருளாகக் கொண்டு பேசப்பட்டன. ஆனால், அவ்விடயம் தொடர்பில் இப்போது பேசப்படுவதில்லை. இலங்கையை வெறுத்திருந்த நாடுகளில் பல நாடுகள் எம்முடன் நட்புற கொண்டுள்ளன. எங்களுக்கு உதவிக்கரம் நீட்டுக்கின்றன.
ஜப்பானில் இடம்பெற்ற ஜி 7 மாநாடு இதற்குச் சிறந்த உதாரணமாகும். உலக நாடுகளின் ஆதரவும் உதவியும் தற்போது எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆதரவை கொண்டு, இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விவகார சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டுவருகிறது.
தற்போதுள்ள நிலையில், சர்வதேசத்துடனான நட்புறவை முறித்துக்கொண்டு செயற்படுவோமானால் நாடு அதாலபாதாளத்துக்கு சென்றுவிடும். அதுபோல பட்டினி, வறுமை உள்ளிட்டவைகளும் மக்களை சூழ்ந்துக்கொள்ளும்.” என்றுள்ளார்.
-http://www.athirvu.com