கொஸ்கம பிரதேசத்திலுள்ள சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ அனர்த்தம் முழுநாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இச்சம்பவத்தினால் இராணுவம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் ஏற்பட்ட உயிர், உடைமை சேதங்கள் தொடர்பாக முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
உயிர்ச் சேதம் மிகவும் குறைவாக உள்ள போதிலும், உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மிகவும் அதிகமாக இருக்குமென்றே ஊகிக்கத் தோன்றுகிறது.
இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு நீண்ட நேரம் தீப்பற்றி எரிந்திருப்பதனால் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்களுக்கு ஏற்பட்ட அழிவு எத்தனை மோசமாக இருக்குமென்பது புரிகிறது.
அங்கிருந்த அத்தனையுமே வெடிபொருட்களும் சுடுகலன்களுமாகும்.
இராணுவ முகாம் பிரதேசமே பல மணி நேரத்துக்கு பெரும் அக்கினிச் சுவாலையாகக் காட்சியளித்தைக் காண முடிந்தது.
அதேநேரம் வெடிபொருட்களில் தீப்பற்றிக் கொண்டதால் அயல் பிரதேசங்களெங்கும் பெரும் ஆபத்து நிறைந்த இடங்களாக மாறியிருக்கின்றன.
வெடிபொருட்கள் தாறுமாறாக நாலாபுறமும் வெடித்துச் சிதறியதால் பெரும் பிரதேசமொன்று கடுமையான அனர்த்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
உண்மையில் கூறுவதானால் கொஸ்கமவில் இடம்பெற்றுள்ள பயங்கரமானது, இயற்கை அனர்த்தத்தைப் பார்க்கிலும் பாரதூரமாகவே இருந்துள்ளது.
எவருமே எதிர்பார்த்திருக்காத விதத்தில் இடம்பெற்ற இப்பயங்கர சம்பவத்தினால் இராணுவத்துக்கு மாத்திரமன்றி பொதுமக்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதமும் அதிகமாகவே உள்ளது.
உயிருக்கு அஞ்சி வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் ஏராளம். அயலில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தற்காலிக இருப்பிடங்களில் தங்கியிருக்கின்றனர். பலர் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் வெளியேறியதால் வெறுமையாகக் கிடக்கும் வீடுகளைப் பாதுகாப்பதற்கான பணியில் இராணுவம் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் தீப்பற்றிக் கொண்டதும் மேற்கொள்ளப்பட்ட அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டப்படக் கூடியவையாக உள்ளன.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அவசர நடவடிக்கைகளை முப்படையினரும் மேற்கொண்டிருந்த அதேசமயம், பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிக்க மேற்கொண்ட நடவடிக்கை திருப்தியாகவே உள்ளது.
பொதுமக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருக்காவிடின் கூடுதலான உயிரிழப்புக்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடும்.
இலங்கையில் யுத்த காலத்துக்குப் பின்னர் இராணுவ தரப்புக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக கொஸ்கம முகாமில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தைக் கூற முடியும்.
இச்சம்பவத்துக்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். சி.ஐ.டி. யினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை எந்தவொரு ஊகத்துக்கும் வர முடியாதிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து இரு விதமான ஊகங்களுக்கு மட்டுமே வர முடியும்.
ஒன்று கவனக் குறைவு காரணமாக ஆயுதக் கிடங்கில் தற்செயலாக தீ பரவியிருக்கக் கூடும்.
இல்லையேல் அரசாங்கத்துக்கு விரோதமான சக்திகளின் சதிநாசகார செயலாக இருக்கக் கூடும்.
இவ்விரண்டு காரணங்களில் ஏதோவொன்றைத் தவிர வேறெந்தவொரு முடிவுக்கும் வருவதற்கில்லை.
இவ்விரு காரணங்களில் ஏதோவொன்று உண்மையாக இருக்கக் கூடும். ஆனால் இரண்டுக்குமே அடிப்படைக் காரணம் கவனக் குறைவுதான் என்பதில் சந்தேகமில்லை.
ஆயுதக் களஞ்சியமொன்று இவ்வாறு தீப்பற்றி எரிவதென்பது சாதாரணமானதொரு சம்பவமில்லை.
அங்கே மிக மோசமான கவனக் குறைவும் அசமந்தமும் இருந்திருக்கின்றன. அங்குள்ள நிர்வாகத்தில் ஏதோவொரு இடத்தில் பாரதூரமான குறைபாடு இருந்திருக்கிறது.
இவ்வாறானதொரு விபரீதம் எத்தகைய சேதங்களை ஏற்படுத்துமென்பதைப் புரிந்து கொள்ள முடியாதபடி அம்முகாமின் நிர்வாகத்தில் எங்கோவொரு குறைபாடு இருந்துள்ளதென்பது மட்டும் உண்மை.
அரசாங்கத்தின் குறைகளைக் கண்டுபிடிப்பதில் எதிரணி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், கொஸ்கம சம்பவமானது அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துமென்பதை இங்கு கூற வேண்டிய அவசியம் கிடையாது.
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் கவனக் குறைவாக இருப்பதாக மஹிந்த அணியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதனால், அவர்களுக்கு இச்சம்பவமானது வாய்ப்பாகப் போயுள்ளது.
எது எவ்வாறிருப்பினும் விசாரணையின் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்.
ஆனாலும், அரச இயந்திரமானது எப்போதும் வினைத்திறன் மிகுந்ததாகப் பேணப்பட வேண்டும்.
இதுபோன்ற குறைபாடுகள் இனிமேலும் நிகழாதபடி தீவிரமான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, நிர்வாகத்தைச் செம்மைப்படுத்துவதே இன்றுள்ள அவசர பணியாகும்.
-http://www.tamilwin.com