இனப்பிரச்சினைக்கான தீர்வை வருட இறுதிக்குள் எட்டுவதே இலக்கு!- சம்பந்தன்

sambanthan_001பல்வேறுபட்டவர்கள் சில பல கருத்துக்களைக் கூறினாலும் நியாயமான நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினரை சந்தித்திருந்தது.

இச்சந்திப்பின் பின்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த வருட இறுதிக்குள் ஏற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அவ்விதமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வேறுபட்டவர்கள் சில பல கருத்துக்களைக் கூற முடியும். அவ்வாறான கருத்துக்களால் நாம் குழம்ப வேண்டிய அவசியமில்லை. நாம் நிதானமாக இருக்க வேண்டும். நிரந்தரமான தீர்வை நோக்கிச் செல்லவேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் நியாயமான நிரந்தரமானதும் நாட்டிற்கு உகந்ததுமான தீர்வாகவும் அமையவேண்டும்.

அதேநேரம் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை குறித்து கருத்து வெளியிட்ட சம்பந்தன்,இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. வழிநடத்தும் குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மக்களுடைய அபிப்பிராயத்தை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அனைத்து தரப்புக்களும் தமது பணிகளை முன்னெடுக்கின்றன.

ஆகவே அவ்விடயம் தொடர்பான கருமங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்றார்.

மேலும் சர்வதேச மட்டத்திற்கு பேச்சுவார்த்தைகளை கொண்டு செல்வது குறித்து தற்போது கூறமுடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.

– Virakesari

TAGS: