(ஈழத்) தமிழ் கலைகள் இன்றைய காலகட்டத்தில் வளர்க்கப்படுகிறதா? சிதைக்கப்படுகிறதா?

pic01உலகத்திலுள்ள அனைத்து விடயங்களையுமே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது உள்ளங்கைகளில் கொண்டு வந்து விட்டது. இது அன்றாட வாழ்கையில் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது என்பதுடன், உலக மக்களின் கலை கலாச்சாரங்களையும் அனைவரும் அறிந்து கொள்வது இலகுவாகிவிட்டது.

இதன் மூலமாக கலைகளுக்குள் வித்தியாசமான விதிமுறைகளை சோதித்துப் பார்த்து புதிய கலப்புகளை உருவாக்கி உள்ளது. தமிழ் பாடல்களும், வாத்தியக்கருவிகளும், வேற்று கலைகளுக்குள் பாவிக்கப் படுகின்றது என்பது மகிழ்ச்சியான விடயம் தான்.

அதே சமயம் எமது கலைகளுக்குள் வேற்றுக்கலை அம்சங்களும் கலக்கப்பட்டுள்ளது. இது தவறான விடயம் அல்ல. ஒவ்வொரு கலைஞனும் புதுப் புது முயற்சிகளாலும் கலப்புகளாலும் புதிய கலைகளை கொடுப்பதே அவனுடைய கலை வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைகிறது.

நாகரீக வளர்ச்சியிலே பல கலப்புகளுடன் தான் இன்று அதிகமான படைப்புகள் அமைகின்றன. அந்த வகையிலே இன்றைய கால கட்டத்தில் தென் இந்திய சினிமாவின் அநேகமான தயாரிப்புக்களில் மேற்கத்தைய படைப்புகளின் தாக்கம் இருப்பதை உணரலாம்.

ஆரம்ப காலத்தில் தென் இந்திய தமிழ் சினிமாவும் பாரம்பரிய கலை சார்ந்து கர்நாடக இசை சார்ந்து தான் அமைந்திருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியான பாடல்கள் பெரும்பாலும் ரசிக்கப் படாத வண்ணம் உள்ளதின் காரணம் ரசிகர்களின் ரசனை மாற்றமா அல்லது படைப்பாளிகளின் படைப்புகள் மேற்கத்தைய கலை சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமா?

உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் கோடம்பாக்க சினிமா வியாபித்து இருக்கின்றது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் உலகத் தமிழர்களிடம் ஒரு இறுக்கமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

போரினால் இடம் பெயர்ந்து உலகின் பல இடங்களில் இலங்கைத் தமிழர்கள் வாழுகின்றார்கள். சொந்த நாட்டின் சூழல் காரணத்தால் ஈழத்து கலைகளையும் சினிமா படைப்புகளையும் இலங்கையில் இருக்கின்ற பொழுதே பெருமளவில் அமைக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுது வளர்ந்து வருகின்ற தமிழ் கலைஞர்கள் இலங்கையிலும் சரி வேறு நாடுகளிலும் கலைப் படைப்புகளை படைக்கத் தொடங்கி விட்டனர்.

பிரித்தானியாவிலும் ஆங்கிலம் பேசப் படுகிறது, ஆஸ்திரேலியாவிலும் ஆங்கிலம் பேசப் படுகிறது, அமெரிக்காவிலும் ஆங்கிலம் பேசப் படுகிறது.

மொழியின் அடிப்படையில் ஒரே மொழி தான் பேசப் படுகிறது என்றாலும், இந்த ஒவ்வொரு நாடுகளிலும், கலை, கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு என்பன வேறு பட்டுத்தான் உள்ளது.

அதே போன்று தமிழ் நாட்டிலும் தமிழ் தான் பேசப் படுகிறது, இலங்கையிலும் தமிழ் தான் பேசப் படுகிறது ஆனால் இந்த ஒவ்வொரு நாட்டிலும் கலை கலாச்சாரங்கள் வேறுபட்டுத்தான் இருக்கிறது.

ஆகையால் தென் இந்திய கலப்பு சினிமாவின் தாக்கத்தில்தான் சொந்த நாட்டிலும், புலம் பெயர்ந்தும் வாழுகின்ற இலங்கைத் தமிழர்கள் தமது கலைப் படைப்புகளை மேற்கொள்ளுகிறார்கள்.

நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டாலும் அங்கே தென் இந்திய சினிமா படைப்புகளின் அடிப்படையில் தான் நிகழ்வுகள் அமைகின்றன.

இன்னமும் தமிழ் கலைகளை ஒட்டிய படைப்புகள் தென் இந்திய சினிமாவினாலும் ஒரு சில இலங்கை கலைஞர்களாலும் வெளிவருகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கர்னாடக சங்கீதத்தை ஒட்டி சில பாடல்களும் சமூக அக்கறை உள்ள படைப்புகளும் வெளிவந்தாலும் கூட வர்த்தக சினிமாப் படைப்புக்கள் மட்டுமே மேலோங்கி இருக்கின்றன.

இதே பாணியைத் தான் இலங்கை கலைஞர்களும் பின்பற்றுகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கென இருக்கக்கூடிய அடையாளங்கள், இலங்கை கலைஞர்களின் படைப்புகளில் குறைந்திருக்கும் காரணத்தினால், இலங்கை கலை கலாச்சாரம் மிக விரைவில் அழிந்துவிடக்கூடிய சூழலை ஏற்படுத்துகின்றது. எனவே இலங்கை கலைஞர்களுடைய படைப்புகளும் தென் இந்திய சினிமாப் படைப்புகள் போல் தான் தென்படுகின்றன.

எனவே வளர்ந்து வரும் கலைஞர்கள் வர்த்தகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் கலையை பார்க்கின்றார்களா? கலைக்காகத் தம்மை அர்ப்பணித்து வரக் கூடிய தரமான கலைப் படைப்புகள் ஏன் குறைவாக இருக்கிறது?

ரசிகர்களுக்காக மட்டும் தான் இப்பொழுது கலையா? ஒரு கலைஞனின் திருப்திக்காக படைப்புகள் அமையாதா? இலங்கைத் தமிழ் கலைஞர்களின் படைப்புக்களில் ஈழத்து கலை கலாச்சாரங்களின் அடையாளத்தை உள்ளடக்காதா? என்ற பல கேள்விகள் முழுமையாக தம்மை கலைக்கு அர்ப்பணித்த ஈழத்துக் கலைஞர்கள் மத்தியில் இன்னமும் இருக்கிறது.

எதிர்வரும் 12ஆம் திகதி ஜூன் மாதம் கனடா நாட்டில் இரண்டு நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஈழத் தமிழ் கலையை வளர்க்கும் நோக்கில் இசையரங்கம் நடத்தும் இசைக்கு ஏது எல்லை எனும் நிகழ்வில் ஈழத்துக் கலைக்கும் வடிவம் கொடுக்கும் நிகழ்வும், தென் இந்திய சினிமா படைப்புகளை கொண்டு தென் இந்திய கலைஞர்களை அழைத்து வந்து நடத்தக்கூடிய சுவார்டம் நிகழ்வும் நடை பெற இருக்கிறது.

இந்த இரு நிகழ்விற்கும் எவ்வளவு இசை மற்றும் கலை ஆர்வலர்கள் வருகின்றார்கள் என்பதில் எப்படியான நிகழ்விற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தமிழர்கள் மத்தியில் எந்த வகையான நிகழ்வுகள் நடந்தாலும், அவர்களை ஊக்குவிக்க லங்காசிறியினுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்.

-http://news.lankasri.com

TAGS: