வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கக் கோரும் விக்கினேஸ்வரனை கோமாளி என்கிறார் உதய கம்மன்பில

udaya kammanpilaவடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டு வந்த, வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதை நாம் எதிர்க்கவில்லை. இது ஒரு மனிதாபிமான விவகாரம்.

ஆனால், இலங்கை இராணுவ முகாம்களை அகற்றி, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் தான் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வாதத்தை ஏற்க முடியாது. வடக்கில் பயன்படுத்தப்படாத பல நிலங்கள் உள்ளன.

2014ஆம் ஆண்டின் முடிவில், வடக்கில் இருந்து 21 ஆயிரம் படையி்னர் விலக்கப்பட்டனர்.

வட மாகாண முதலமைச்சர், நேற்று வடக்கில் இருந்து இராணுவத்தினர் முற்றாக விலக வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் ஒரு கோமாளியாக இருக்கிறார்.

அவரைப் போலவே, ஏனைய எட்டு மாகாண முதலமைச்சர்களும், இலங்கை இராணுவத்தினரை வெளியேற்றக் கோரினால், நாம் இராணுவத்தினரை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?

போரின் முடிவில், 12 ஆயிரம் விடுதலைப் புலிகள், கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடும்.

இதுதொடர்பாக எமக்கு கடந்தகால அனுபவங்கள் உள்ளன. எனவே அவர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

போரின் இறுதியில், பல புலிகள் சரணடையாமல் தப்பிச் சென்றனர். வடக்கில் இன்னமும், தற்கொலை அங்கிகளும், ஆயுதங்களும் மீட்கப்படுகின்றன.

போர்க்காலத்தில் வடக்கில் அரச நிர்வாக இயந்திரம், முற்றாகச் செயலிழந்திருந்தது. அதற்கு இராணுவத்தினரே பொறுப்பாக இருந்தனர்.

அரச விவகாரங்களில் இன்னமும் இராணுவத்தினரின் பங்களிப்பு அவசியமாகத் தேவைப்படுகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: