உணவு கேட்டு மறியல் போராட்டம்: 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு

venezuela-riotsவெனிசுலாவில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக எழுந்த மறியல் போராட்டத்தில் இதுவரை 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உணவு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகின்றது.

இதனிடையே மெரிதா பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் மறியல் போராட்டத்தின் இடையே ராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக கூறப்படுகிறது.

போதிய உணவு மற்றும் மருந்து வகைகளுக்கு கடும் பற்றாக்குறை காரணமாக நாட்டில் தொடர் போராட்டங்களும் மோதல் போக்கும் ஏற்பட்டு வருகிறது.

எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சியை சந்தித்ததே வெனிசுலாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. அயல் நாடுகளில் இருந்து உணவு இறக்குமதிக்கும் நிதி திரட்ட முடியாத இக்கட்டான நிலையில் வெனிசுலா அரசு தள்ளப்பட்டுள்ளது.

உணவுக்காக பல மணி நேரம் வரிசையில் நின்றதாலும் கடும் பட்டினியாலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளனர். மட்டுமின்றி நாடு முழுவதும் தினசரி 10 உணவு வேண்டி கொள்ளை சம்பவங்களும் நடந்தேறுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு சொந்தமான மளிகைக் கடை ஒன்றில் நடந்த மோதலில் உணவுக்காக வரிசையில் நின்றிருந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி குண்டடிபட்டு உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கலவரம் மற்றும் உணவுக்கொள்ளையில் ஈடுபடும் 400 நபர்களை இதுவரை கைது செய்துள்ளதாக தேசிய பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com