உலகில், உச்சபட்ச வன்முறை என்றுமே ஆயுதங்களால் நிகழ்வதில்லை, அது தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுப்பதால்தான் நிகழ்கிறது.
நிச்சயம் ஒரு மனிதனை அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏங்கவிட்டு, அலைய விடுவதைவிட ஒரு வன்முறை இப்புவியில் இருந்துவிட முடியாது.
ஆனால், நாம் தினமும் அந்த வன்முறையை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம். இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுக்கிறோம் அல்லது இதே காரணங்களுக்காக அரசு வன்முறையை ஏவும்போது கள்ள மெளனம் சாதிக்கிறோம்.
அன்பும், பாதுகாப்பும் மறுக்கப்பட்டவர்களை அகதிகள் எனும் புது அடையாளத்துடன், சொந்த மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து அலைய விடுகிறோம்.
இன்று உலகம் முழுவதும் ஒரு பெருங்கூட்டம் அன்பிற்காக, பாதுகாப்பிற்காக, வாழ்வாதாரத்திற்காக அல்லது மிச்சம் இருக்கும் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடல், மலைகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
எங்காவது ஒரு நம்பிக்கைச் செடி, பூ பூக்காதா, எம் பக்கம் வசந்தம் வீசாதா…’ என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.
இவளும் அந்த பெருங்கூட்டத்தை சேர்ந்தவள்தான். அவள் அகதி என்று அழைக்கப்பட்டாள். அவளுக்கென்று தோட்டத்துடன் திருகோணமலையில் ஒரு பெரிய வீடு இருந்தது, அவளுக்கு என்று அங்கு ஒரு வாழ்வு இருந்தது.
அவளுக்கென்று ஒரு பெயரும் இருந்தது. ஆனால், ஒரு துரதிருஷ்டமான நாளில் எல்லாம் சிதைந்தது. உள்நாட்டு போர் அவள் வாழ்வை உருமாற்றியது.
அவள் தன் உறவுகளை, உடமைகளை இழந்து, தன் ஊரிலிருந்து புலம் பெயர்ந்தாள். அகதி எனும் புது அடையாளம் அவள் மீது போர்த்தப்பட்டது. இப்போது அவள் தருமபுரி மாவட்டம், தும்பலஹள்ளி அணை அருகே உள்ள அகதிகள் முகாமில் வசிக்கிறாள்.
அந்த அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகப் போகிறது. அதுபோல்தான் அவள் வாழ்வும் ஈரமான அன்பை உணர்ந்து ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகிறது. ஒரு மழை நாளில், எண்பது சதுரஅடி முகாம் வீட்டில் அவளைச் சந்தித்து உரையாடினேன்.
உணர்வுபூர்வமான உரையாடல் அது. தம் மக்கள் தம்மை அரவணைப்பார்கள், அன்பு செலுத்துவார்கள் என்று வந்த ஒரு சமூகத்தை நாம் எப்படி சுரண்டிக் கொண்டிருக்கிறோம், எப்படி வஞ்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவருடனான அந்த உரையாடல் உணர்த்தியது.
அவள் முன் வைத்த எந்த கேள்விகளுக்கும் என்னிடம் விடை இல்லை… ஒரு வேளை உங்களிடம் ஏதேனும் விடை இருக்கிறதா என்று பாருங்கள்…”நாங்கள் அனைவரும் இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த 90களின் மத்திய காலத்தில் இங்கு வந்தோம்.
அப்போது எங்கள் மனதில் சொந்த ஊரைவிட்டு வருகிறோமே என்ற கவலை இருந்தாலும், வாழ்வு குறித்த பெரும் நம்பிக்கை இருந்தது. எம் இன மக்கள் எம்மை அன்புடன் வரவேற்பார்கள், அன்பு செலுத்துவார்கள் என்று நம்பினோம்.
ஆனால், இந்த 20 ஆண்டுகளில் அது மொத்தமாக கரைந்துவிட்டது. அன்பிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கி. ஏங்கி நாங்கள் களைத்துவிட்டோம்.
இப்போது எங்களிடம் இருப்பது வெறுமையும், எம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை தோய்ந்த கற்பனைகளும் தான்…” என்று அவள் முடித்த போது, அந்த இடமே அடர்த்தியான நிசப்தத்தில் நிறைந்து இருந்தது.
அவரே அந்த மெளனத்தை கலைத்தார், ”எங்களுக்கென இங்கு வாழ்வு இல்லை. உயிருடன் இருப்பதெல்லாம் வாழ்வாகாது. அன்பும், ஆதரவும் நிறைந்து இருப்பதுதான் வாழ்வு.
ஆனால் அத்தகைய வாழ்வு எங்களுக்கு ஏனோ கிடைக்கவில்லை. உங்கள் தலைவர்கள் மேடைகள் தோறும் முழங்குகிறார்கள், உலகம் சமுதாயம் தமிழ் இனத்தை வஞ்சித்து விட்டது என்று. இல்லை. அந்த தலைவர்கள்தான் எங்களை வஞ்சித்துவிட்டார்கள்.
தமிழர் நலம் பேசும் எந்த தலைவர்களும் இதுவரை எங்களை வந்து சந்தித்தது இல்லை… எங்கள் தேவைகளை அறிந்ததில்லை… ஒரு வேளை எங்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால், எங்களை வந்து சந்தித்து இருப்பார்களோ என்னவோ…?நாங்கள் முகாமிலிருந்து வெளியே செல்லவேண்டுமென்றால், எங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆறு மணிக்குள் முகாமிற்கு வந்துவிட வேண்டும்.
வெளியூர் செல்ல வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என பல இறுக்கங்கள் இருக்கின்றன. இதை காரணமாக சொல்லி எங்களுக்கு வேலை தரும் முதலாளிகளும் எங்களை சுரண்டுகிறார்கள்.
எங்களில் பெரும்பாலானோர் கட்டட தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ஊதியத்தை என்றுமே அவர்கள் பெற்றதில்லை.
பிறருக்கு ஒரு சம்பளமென்றால், முகாம்வாசிகளுக்கு ஒரு சம்பளம். எங்களது இயலாமையிலிருந்தும் முதலாளிகள் லாபமடைகிறார்கள்.இப்போதும்கூட என் பெயரை குறிப்பிடாதீர்கள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது.
என் பெயர் ஊடகத்தில் வந்தால், ‘Q’ பிரிவு காவலர்களின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நான் முன்பே சொல்லியதுபோல், நாங்கள் இங்கு வாழவில்லை, பிழைத்திருக்கிறோம்” என்று முடித்தவருக்கு என்ன பதில் நம்மிடம் இருக்கிறது?
இது உண்மையில் தும்பலஹள்ளி முகாமின் நிலை மட்டுமல்ல, நாகாவதி, வாணியாறு, திருச்சி, கும்மிடிப்பூண்டி என தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான முகாம்களின் நிலை இதுதான்.
பாதுகாப்பற்ற இடம் இல்லாமல், மாதத்திற்கு அரசு தரும் 12 கிலோ அரிசியைக் கொண்டு சக தமிழர்கள் வசிக்கும் அதே மண்ணில் அவர்களும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் அன்பு செலுத்தி இருந்தால்…? ஒரு வேளை நாம் அவர்களிடத்து அன்பு செலுத்தி இருந்தால், கூட்டம் கூட்டமாக ஈழத் தமிழ் அகதிகள், நல் வாழ்வைத் தேடி ஆஸ்திரேலியாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்க மாட்டார்கள்.
44 தமிழ் அகதிகள் இந்தோனேசிய சுமத்திரா தீவு கடல் பகுதி அருகே தத்தளித்திருக்க மாட்டார்கள். இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் நிலை. நாம் அன்பு செய்ய மறக்கிறோம், மறுக்கிறோம்.
அகதிகள் எப்போதும் பொருளாதார ரீதியான வறுமைக்காக கவலைப்படுவதில்லை… ஆனால், அவர்கள் ஏங்குவது அன்பிற்காகவும், அரவணைப்பிற்காகவும்தான். அதை தர மறுப்பதுதான் உச்சபட்ச வன்முறை.
இனியாவது ஏதலிகள் மீது அன்பு செலுத்துவோம். அவர்களுக்காகவும் பேசுவோம்.
இன்று உலக அகதிகள் தினம்.
-Vikatan
ஈக்கும் எறும்புக்கும் கல்லு மாவில் போட்டால் பசியாறாது என்று அரிசிமாவில் கோலம் போட்ட இனம்..
இன்று..
அகதி பட்டம் வாங்கி நாடு நாடாக ஓடி கையேந்தி அலைகிறது
இன உணர்வு மழுங்கி விட்டது உலக தமிழனுக்கு !,ஜெர்மன் நாடில் பல கோடி பணத்தை செலவு செய்து புதியதாக கோவில் கட்டி இருக்கிறான் இலங்கை தமிழன் , பக்தியில் நாசமான போன இனம் நம் இனம்தாம் !
ஐயா வெற்றி தமிழன் அவர்களே நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை– நம் மொழிக்கு நாம் மதிப்பு கொடுப்பதில்லை -ஆனால் எங்கேயும் கோவில்கள்- கண்டகண்ட இடங்களில் -ஏன் அத்தனை கோவில்களையும் ஒன்றாக பெரிய அளவில் செய்யலாமே? முதலில் தமிழ் பள்ளிகளுக்கு நாம் எவ்வளவோ செய்ய வேண்டும்–சீனர்களை பாருங்கள் அவர்களின் பள்ளிகளுக்காக எவ்வளவு செய்கிறார்கள்?
என் இதயம் கனக்கிறது என்பது குறைந்த பட்சமே– நம்மவர்கள் படும் துயரங்களை படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது — தமிழ் நாட்டு மடையர்களை எண்ணினால் அதை விட கொதிக்கிறது. தமிழ் நாடு இவர்களுக்கு ஏன் தற்காலிக அடைக்கலம் கொடுக்க கூடாது? தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் மிகவும் கொடுமைக்கு ஆளாகியும் மோசமாகவும் நடத்தப்படுகிறார்கள் என்று கேள்வி பட்டேன்– ஏன் நம்மினம் இவ்வளவு கேடு கெட்ட இனமாக இருக்கிறது? கூப்பிடு தூரத்தில் நம் உடன்பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்டபோது தூங்கிகொண்டிருன்தனர். துரோகிகள் மலிந்த இனம் நம்மினம். கட்டபொம்மனில் இருந்து கருணா வரை துரோகிகளாக நம்மை பிரித்து நம் அழிவுக்கு துணை போகின்றனர்.
நம்மில் பலருக்கு மற்றவர் எக்கேடு கேட்டாலும் அக்கறை இல்லை–அதிலும் தலைவன்கள் என்று கூறிக்கொண்டு வெத்து வெட்டாக இருக்கின்றனர்.
வெற்றி தமிழன் நந்தா… (பக்தியில் நாசமான போன இனம் நம் இனம்தாம் ) நீங்க சொல்வது ஜெர்மனியில் உள்ள தமிழனை ஆனால் இங்க தெலுங்க மன்னன் இந்து தான் பெரியது . சைவம் தரமற்றது என்று கூக்குரலிடுறான். ஜெர்மனியில் இருந்து கொஞ்சம் மலேசியாவிக்கு வாங்க …
பக்தியில் நாசமான போன இனம் நம் இனம்தாம் தமிழ் நாட்டு மடையர்களை. எவ்வளவு ஆரோக்கியமான வார்த்தை .. இன்னும் வேற நல்ல வார்த்தை இருக்குதா ? தமிழன் இன்னொமொரு தமிழனை இப்படி பேசினால் வேற இனம் நம்மளை எப்படி மதிப்பான் . கொண்டவன் கோலால் அடித்தால் கண்டவனும் காலால் உதைப்பான் என்று படித்துருக்கேன். அது சரிதான் .. சீனர்களை பாருங்க என்ற கேள்வி வேற .. .. எந்த சீனனும் அவன் இனத்தை இப்படி கேவல படுத்தத் மாட்டான் அதையும் சேர்த்து கொள்ளுங்க ..இங்கு உள்ள சில சீனர்களும் மலாயக்காரகளும் நம்ம சாதி வைத்து திட்டுறாங்க . அவர்களிடமும் நாம் நம்மளை தப்பா பேசியதன் விளைவு இது. தமிழ் நாட்டில் ஆளுவது திராவிடன் பேரில் தெலுங்கன். அவன் எப்படி ஈழத்து தமிழர்களுக்கு உதவுவான். தமிழ் நாட்டு தமிழர்களுக்கே வாழ இடம் இல்லை. தயவு செய்து எந்த நாட்டு தமிழனையும் தப்ப பேசாதீர்கள். நீங்க வீசும் கல்லு நமக்கே திரும்பி வரும்.
சின்ன பையன் அவர்களே, மன்னிக்கவும் . மற்ற இன கூதடத்திற்கு சென்று இருக்கிர்கள, அங்கு அவர்களை மேம்படுத்த இபடித்தான் சிந்தனையை தொட்டு பேசுவார்கள். அவர்களும் இந்த அளவுக்கு ஒற்றுமையாக வாழ வலி பிறந்தது. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
தமிழ் நாட்டுத் தமிழன் மடையன் அல்ல. அவன் கேடு கெட்ட மடத் தமிழன்.இன மொழி உணர்வற்ற தமிழன்.தினம் சினிமா அரங்கை சுற்றி வரும் தன் சொந்த சரித்திரம் மறந்த தமிழன்.