பொறுப்புக்கூறும் விடயத்தில் இழுபறி நிலை வேண்டாம்

mullivaikkal-300x173இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று நல்லாட்சி அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதி வழங்கியிருந்தபோதிலும் அதற்கான உரிய நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கவில்லை என்ற அதிருப்தி தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ்மக்களின் இந்த அதிருப்தியை தமிழ்தேசியக்கூட்டமைப்பு தற்போது வெளிப்படுத்தி வருகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்டது.

வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன்மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர் பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பொறுப்புக்கூறல், நிலைநாட்டப்படவேண்டும் என்றே பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது.

இந்த உறுதிமொழிக்கிணங்க விசாரணைகளை மேற்கொள்வதற்காக உள்ளகப் பொறிமுறையினை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுவந்தது. ஆனாலும், இந்த செயற்பாடானது மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளடக்கப்படவேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் வெளிநாட்டவர்களது ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியுமே தவிர உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளையோ, அல்லது வழக்கறிஞர்களையோ ஈடுபடுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தடவைகள் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதேபோல் அமைச்சர்களும் இத்தகைய கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடைபெற்று வருகையிலேயே ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

விசாரணை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இவ்வாறிருக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கமானது முழுமையாக நிறைவேற்றவேண்டும். இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியிருக்கிறார்.

இதேபோல் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும். இதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அமெரிக்க காங்கிரஸினால் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து உரையாற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தார். இதேபோன்று தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலையும் சந்தித்து இவ்விடயம் குறித்து அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு மேலதிகமாக ஜெனிவாவிற்கு விஜயம் செய்த சுமந்திரன் எம்.பி. அங்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் மனித உரிமை, மனிதாபிமான மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்பார்ப்பு என்ன என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தமாக கூறவேண்டும். பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கமளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இங்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை உறுப்புநாடுகள் வழங்கவேண்டும். அதேபோன்று விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு என்பது அவசியமானதாகும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதேபோல் அரசாங்கமானது சர்வதேச நீதிபதிகளை விசாரணையில் இணைத்துக்கொள்வதற்கு தயாரில்லை என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் உள்ளக விசாரணையானது நீதி நியாயமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரானது எதிர்வரும் முதலாம் திகதிவரை இடம்பெறுகின்றது. எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை குறித்த தனது வாய்மூல அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் விடுக்கவுள்ளார். இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அழுத்தம் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவிவருகின்றது.

இலங்கை அரசாங்கம் உறுதி அளித்ததன்படி அரசியல் கைதிகள் விடுவிப்பு மற்றும் மக்களின் காணிகள் மீளக்கையளிப்பு, அரசியல்தீர்வு விடயங்கள், ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இவ்வாறு பெரும்பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்தித்திருந்தனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் தமக்கு நீதி கிடைக்காது என்று அவர்கள் உறுதியாக நம்பியிருந்தனர்.

அதனால்தான் சர்வதேசத்தின் அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் செயற்பட்டு வந்தனர். ஆனால் தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் நல்லாட்சி அரசாங்கத் தரப்பினரும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது.

தற்போது அந்த எதிர்பார்ப்பு அருகிவருகின்ற போதிலும், இன்னமும் அது முழுமையாக அற்றுப்போய்விடவில்லை.எனவே தற்போதைய நிலையில் இழுபறிநிலையிலுள்ள உள்ளூர் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பில் ஓர் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் இவ்விவகாரம் குறித்து சுட்டிக்காட்டவேண்டும் என்பதே தமிழ் மக்களது பிரதிநிதிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த அநீதிதிக்கு பொறுப்புக்கூறவேண்டியது அரசாங்கத்தின் கடமையேயாகும்.

ஆனால் அந்தப் பொறுப்புக்கூறும் செயற்பாட்டிலிருந்து விலகுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயலுமாக இருந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை பூரணமாக இழக்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும்.

எனவே இந்த விடயம் குறித்து சிந்தித்து செயற்படவேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: