அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

pic01இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியில் அகதிகள் படகு இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், தரைதட்டியது.

ஒரு வாரகாலமாக படகில் இருந்து இறங்க அகதிகளுக்கு அனுமதி மறுத்து வந்த இந்தோனேசிய அதிகாரிகள், அனைத்துலக அழுத்தங்களை அடுத்து கடந்த சனிக்கிழமை, அகதிகளை தரையிறங்க அனுமதித்தனர்.

இதையடுத்து, ஆச்சே மாகாணத்தின் லோக்நா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில், 44 அகதிகளும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திக்க நேற்று அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு அதிகாரிகளுக்கு முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.

தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள அகதிகள், தாம் ஆளுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா கொடுத்து படகில் பயணம் மேற்கொண்டதாகவும், படகின் கப்டன் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை, தாம் தொடர்ந்து அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பழுதடைந்துள்ள படகைத் திருத்தி, அகதிகளை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதில் இந்தோனேசிய அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

நேற்றுக்காலை இந்தோனேசி்ய பாதுகாப்பு அதிகாரிகள், பெக்கோ இயந்திரத்தின் துணையுடன், அகதிகள் படகை கடலுக்குள் மீண்டும் தள்ளிச் செல்வதற்கு முயற்சித்தனர்.

எனினும், கடுமையான அலைகளினால் அந்த முயற்சி சற்று நேரத்திலேயே தற்காலிகமாக கைவிடப்பட்டது.

படகை கடலுக்குள் தள்ளிச் சென்று, அருகில் உள்ள துறைமுகம் ஒன்றில் வைத்து அந்தப் படகில் அகதிகளை ஏற்றி அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் செல்வதற்கு இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: