போர் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பின்னரும் கண்ணிவெடி பீதியில் தமிழ் மக்கள்!

pic01இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது.

அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் காணிகளில் காணப்படும் மிதிவெடிகள், கண்னி வெடிகளை அகற்றி விரைவாக தங்களிடம் அதனை கையளிக்க வேண்டும் என அவர்கள் கோருகிறார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாந்துறை, மாவடிவேம்பு மற்றும் ஈரளக்குளம் உட்பட சில இடங்களில் இதே நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான சாலையில் மாவடிவேம்பு இராணுவ முகாம் விலக்கிக் கொள்ளப்பட்டு மூன்று வருடங்களாகின்றன என காணி உரிமையாளரொருவர் கூறுகின்றார்.

இருபது வருடங்களாக தனது காணியில் நிலைகொண்டிருந்த இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மிதிவெடிகள் அகற்றப்படும் வரை நுழைய வேண்டாம் என இராணுவம் அறிவித்துள்ளதால் தான் இன்னமும் காணிக்குள் நுழையவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

சில நாட்களுக்கு முன்பு காணிக்குள் பரவிய தீ மற்றும் வெப்பம் காரணமாக வெடிப் பொருட்கள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் மக்கள் பீதியடைந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரு நிலப்பரப்பில் கண்னி வெடிகளை அகற்றும் பணிகள் ஒரளவு பூர்த்தியடைந்திருந்தாலும் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலை கொண்டிருந்த இடங்களில் காணப்படுவது பற்றி ஏற்கனவே தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ளஸ் கூறுகின்றார்.

பொலிஸ் மற்றும் இராணுவம் அதிகாரபூர்வமாக அந்த காணியை கையளித்த பின்னர் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இரு வாரங்களுக்கு முன்னதாக இவ்வாறு அகற்றப்பட்ட இரு இடங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் இது போன்று ஏனைய இடங்களும் கையளிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ள்ஸ் குறிப்பிடுகின்றார்.

– BBC

TAGS: