ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்: கொடூரமாக குத்தி கொலை செய்த மகன்கள்

isis_gainstanmerica_001சவுதி அரேபியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற தாயாரை மகன்கள் இருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியின் தலைநகரான ரியாத்தில் 20 வயதான இரட்டை சகோதரர்கள் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் மீது இவர்களுக்கு அளவற்ற விசுவாசம் இருந்துள்ளது. மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு இருவரும் ரகசியமாக திட்டமிட்டுள்ளனர்.ஆனால், இந்த திட்டம் இவர்களது தாயாருக்கு தெரியவந்துள்ளது.

‘’நாட்டை விட்டு வெளியேறி ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றால், அரசாங்கத்திடம் உங்களது திட்டம் குறித்து தெரிவித்துவிடுவேன்’’ என தாயார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவர் வீட்டை விட்டு வெளியே சென்று ரகசியமாக திட்டமிட்டுள்ளனர்.

’தனது குடும்பத்தினர் உயிருடன் இருக்கும் வரை நமது கனவு நிறைவேறாது’ என எண்ணிய அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீண்ட கத்தி ஒன்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இருவரின் திட்டத்தையும் முதலில் தெரிந்துக்கொண்ட தாயாரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். பின்னர், தந்தையை நோக்கி பாய்ந்த அவர்கள் அவரையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இதற்கு அடுத்ததாக மூத்த சகோதரரான மூன்றாவது நபரையும் அவர்கள் இருவரும் வெட்டி தள்ளியுள்ளனர்.

மூவரும் உயிரிழந்து விட்டதாக எண்ணிய அவர்கள் அங்கிருந்து திருடிய கார் மூலமாக தப்பி சென்றுவிடுகின்றனர். இந்த சம்பவத்தில் தாயார் அதே இடத்திலேயே பலியானார்.

தந்தை மற்றும் மூத்த சகோதரர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, தலைநகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் இரட்டை சகோதரர்களை பொலிசார் கைது செய்தனர்.

இருவரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததனால் தான் சம்பத்தை நடத்தியதாக இருவரும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

-http://news.lankasri.com