சென்னை: நான் சாகுறப்ப கூட மரணபயம் என் முகத்துல இருக்காது… என் கை மீசை முறுக்கிட்டு இருக்கும்… என் உதட்டுல சிரிப்புதான் இருக்கணும் என்று தமிழ் திரைப்படங்களில் வில்லனைப் பார்த்து பேசுவார் ஹீரோ. என்னதான் வீர வசனம் பேசினாலும் யாராக இருந்தாலும் மரணத்திற்கு முன்பாக ஒரு மரணகளை முகத்தில் வந்து விடும்.
அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்துள்ளார். அவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா. 43 வயதான அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்பும் கனிவும் நிறைந்த மரியா,நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை தொண்டாற்றி வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து போனார். அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மரணிக்கும் தருவாயில் சிஸ்டர் மரியா கூறியவாறே உயிரிழந்தார்.
நோயின் தீவிரம் கொஞ்சம் கூட பாதிக்காமல் முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது. இதுபோன்ற ஒரு மரணத்தை தழுவும் ஆத்மா உண்மையிலேயே அதிகம் புண்ணியம் செய்த ஆத்மாவாகத்தான் இருக்கவேண்டும்.
-http://tamil.oneindia.com