வங்கதேசத்தில் தொடரும் பயங்கரம்… மேலும் ஒரு கோயில் பூசாரி வெட்டிக் கொலை

bangladesh-mapடாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று, மேலும் ஒரு இந்து கோயில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் கொல்லப்பட்ட 3வது இந்திய வம்சாவளி நபர் இவராகும்.

1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்கதேசம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டது.

சுமார் 16 கோடி மக்கள் வாழ்ந்து வரும் வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மாதம் மேற்கு ஜினாய்கா மாவட்டத்தில் கோபால் கங்குலி (70) இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்தது.

கடந்த ஜனவரி மாதம், ஜெனைடா பகுதியை சேர்ந்த சமிர் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் முஸ்லிமாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிய நிலையில் இந்த கொலை நடந்திருந்தது.

பாப்னா மாவட்டம், ஹேமாயத்பூர் பகுதியில் தாக்கூர் அனுகுல் சந்திரா சத்சங்க பரம்தீர்த்த ஹேமாயத்புர்தாம் என்ற இந்து ஆசிரமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் நித்யாரஞ்சன் பாண்டே(60). கடந்த மாதம் 10 ஆம் தேதி வழக்கமான நடைபயிற்சி சென்றபோது நித்யாரஞ்சன் பாண்டேவை வழிமறித்த ஒரு கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற 30 படுகொலைகளில் 18 கொலைகளுக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மூன்று படுகொலைகளுக்கு இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜினைதா மாவட்டத்தில் இன்று காலை மேலும் ஒரு பூசாரி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இங்குள்ள இந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றிவந்த ஷைமானந்தா(45) என்பவர் இன்று அதிகாலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

வங்கதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்கம் வங்கதேசத்தில் வலுவாகி வருவதற்கான அறிகுறிகளாகவும், இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னர் நடந்த பூசாரிகள் கொலைக்கு காரணமான உள்ளூர் தீவிரவாதிகளின் கைவரிசையாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது என மாவட்ட தலைமை அதிகாரி மஹ்பூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com