யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை மழுங்கடிக்கும் கஞ்சா

man cheers at a rally in Jaffnaயாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது’ என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யாழ். மாவட்டத்துக்கென ஒரு கலாசாரம் உள்ளது. அதை இல்லாமல் செய்யும் வகையில், தற்போது சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக கஞ்சா தொடர்பான செய்திகள் தினமும் வெளிவருகின்றன. ஆனால், கைது தொடர்பாக எந்த தகவல்களும் வெளிவருவதில்லை. இதனால், வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர், யாழ். மாவட்டத்தை கஞ்சா வியாபாரம் இடம்பெறும் தளமாக பார்க்கின்றனர்.

இதனால், எமது சமூகத்தின் அடையாளம் மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, கஞ்சா மீட்புக்கள் தொடர்பான விடயங்களை இரகசியமாக வைத்து இந்த கடத்தல்களில் ஈடுபடும் பிரதான சூத்திரதாரிகளை வெளிக்கொண்டுவர வேண்டும். இதனை விடுத்து ஊடகங்களுக்கு இந்த தகவல்களை வழங்க வேண்டாம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: