இலங்கையில் செயற்படுவதாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பற்றிய தகவல்களை கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றும் முஸ்லிம் அதிகாரிகளை ஈடுபடுத்தி உள்ளமை குறித்து அமெரிக்கா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ள தூதரக அதிகாரிகள், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான உண்மையான தகவல்களை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மறைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முஸ்லிம் அதிகாரிகள் தமது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த அதிகாரிகளுக்கு இஸ்லாம் மதம் மீதுள்ள கடும் நம்பிக்கை என்பன காரணமாக அவர்கள் உண்மையான தகவல்களை மறைத்து வருகின்றனர் எனவும் மேற்படி தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த தூரநோக்கற்ற செயற்பாடு காரணமாக பயங்கரவாதிகள் தென் இந்திய பிராந்தியத்தை அச்சுறுத்தும் இருப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்க பங்களிப்பு வழங்கிய இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை இந்திய புலனாய்வு பிரிவுகள் அடையாளம் கண்டுள்ளன.
இந்திய புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்தும் தேவை குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
-http://www.tamilwin.com