வாழ்வாதார உதவி வேண்டாம் எமது பிள்ளைகளே வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்

missing_002“வாழ்வாதார உதவிகள் எவையும் எமக்குத் தேவையில்லை. அதனை நாம் ஏற்கப்போவதில்லை. எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தினர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் நேற்று சந்தித்து தமது பிரச்சினைகளைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கான கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் 60 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்று கூடி இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவரங்களை அறிவிப்பதில் அரசு பின்னடித்து வருகின்றன.

இன்னமும் இரகசிய முகாம்களில் எமது பிள்ளைகள் உள்ளனர். நல்லாட்சி என்று பெருமிதம் பேசும் இந்த அரசு எமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

missingவன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலையை மூடிமறைத்து வெளிநாடுகளுக்கு அரசு ஏமாற்று வித்தைகளைக் காட்டுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாம் தேடியலைகின்றோம். போராட்டங்களை நடத்துகின்றோம். ஆனால், இதுவரை அரசு உருப்படியான எந்த தீர்வையும் பெற்றுத் தரவில்லை.

மாறாக எம்மை ஆற்றுப்படுத்துவதாக வெளிநாடுகளுக்கு பரப்புரை செய்து, வெளிநாட்டு நிதிகளைப் பெற்று பல்வேறு உளச் செயற்றிட்டங்களில் எம்மை கலந்துகொள்ளச் செய்கின்றது.

அவற்றின் மூலமாக எமக்கு அரசு பல்வேறு வடிவங்களில் மூளைச்சலவை செய்கின்றது. இரட்டை அர்த்தங்களில் எமக்கு புரியாத மொழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கோரி கையொப்பம் பெறுகின்றனர்.

வாழ்வாதார உதவி தருகின்றோம் எனக்கூறி ஆடு, கோழி தந்து அரசு எம்மைத் தொடர்ந்து ஏமாற்றுகின்றது.

வாழ்வாதார உதவிகள் எமது உளத்தை திருப்திப்படுத்தாது. எமது பிள்ளைகள் கிடைக்கும்வரை போராடுவோம்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: