தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

r_sambanthan_001தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியில் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை- ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு, புதிய அரசாங்கம் பதவியேற்றதும் மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்த்தது. புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாட்டினை சிறந்த பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உறுதியான அரசாங்கமாக செயற்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாட்டின் குறைபாடுதான் என்ன? இந்த நாட்டில் உள்ள குறைபாடு சமத்துவமற்ற அரசமைப்பாகும். தற்போது எமது ஜனாதிபதி மூலம் அரசமைப்பு மாற்றியமைக்கப்படுவதற்காக சாதமான சூழல் நிலவி வருகின்றது. தமிழர்களின் குரல்கள் கேட்கப்பட்டு வருகின்றது. நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த நாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்க உரிமை உண்டு. அவர்கள் இது எனது நாடு எனத் தெரிவிப்பதில் பெருமைப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான அனைத்து நலன்களும் – உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். ” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: