ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார்.
அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட ‘ஆறிப்போன காயங்களின் வலி’ புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய தமிழினி குறித்துநிறையவே தெரியும் என்றும் அவர் சாதாரண போராளியாக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தான் நெருங்கிப் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதிவரை அவர் என்ன மனநிலையுடன் இருந்தார் என்பதும் தனக்குத் தெரியும் என்று கூறிய வெற்றிச்செல்வி அவரின் பற்றுறுதியையும் தான் அறிவேன் என்றும் குறிப்பிட்டார்.
ஆகவே எனக்கு அக்காவை நன்கு தெரியும் எனக் கூறிய அவர் தமிழினியால் எழுதப்பட்டதாக வந்திருக்கின்ற இந்த நூலில் எனக்கு நன்கு தெரிந்த என் அக்காவை நான் காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
கூர்வாளின் நிழலில் என்ற நூல் போல தனது இந்த நூலை நீங்கள் எதிர்பார்ப்பதும் இனி தனது எழுத்துக்கள் அவ்வாறு வரவேண்டும் என எதிர்பார்ப்பதும் வீணான எதிர்பார்ப்புக்கள் என்றே சொல்ல விரும்புவதாகவும் வெற்றிச்செல்வி குறிப்பிட்டுள்ளார்.
எமது வாழ்வில் நடந்தவைகள் பற்றியும் இனி தமிழர்களாகிய எமது எதிர்பார்ப்பு எவ்வாறானது என்பது பற்றியுமே தான் எழுதியுள்ளதாகவும் அவ்வாறே தனது எழுத்துக்களும் என்றும் இருக்கும் என்றும் வெற்றிச் செல்வி மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினி புற்றுநோயால் சாவடைந்தபோது கிளிநொச்சியில் நடைபெற்ற அவரது இறுதிமரண நிகழ்வை தலைமையேற்று நடத்திய வெற்றிச்செல்வி ஒரு கூர்வாளின் நிழலில் புத்தக வெளியீட்டை புறக்கணித்தமையும் குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com