இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் முதன்மைப்படுத்தல் நாடுகளின் தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் இலங்கையின் சிவில் சமூக சூழ்நிலை மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு விடயங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
எனினும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக பிரித்தானியஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும் அறிவிப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்வில் இருந்து படையினரை தவிர்க்கும் திட்டங்கள் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தகவல்களை அறிந்துக்கொள்ளும் சட்டமூலத்தின் முன்னேற்றத்தன்மை, உயர்மட்டக் கொலைகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள், பலாத்காரமாக காணாமல் போகச்செய்யப்பட்டோரின் சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டமை, பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் என்பன முன்னேற்றம் கண்டு வருவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகளை பாதுகாக்கும் முன்னேற்றக்கரமான திட்டங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதில் சர்வதேச தரத்தைக்கொண்ட சட்டவாக்கம் அமுல் செய்யப்பட வேண்டும் என்று பிரித்தானிய அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com