ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளது.
தொடர்ச்சியாக குறித்த இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் பிரான்ஸ் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியில் பெர்லின் அருகே ஸ்டெக்லிட்ஸ் நகரில் பெஞ்சமின் பிராங்கிளின் வைத்தியசாலையில் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலில் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்தாரியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத செயற்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் மன நோயாளியாக இருக்ககூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினையடுத்து குறித்த வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆபத்தான நிலைமை எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
– http://www.tamilwin.com